பிரபல நடிகர் துல்கர் சல்மான் கடைசியாக ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் ‘லோகா’ மற்றும் தெலுங்கில் ‘ஆகாசம் லோ ஓகா தாரா’ என்ற படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படங்கள் அல்லாது ‘காந்தா’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். காந்தா படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்படுகிறது.
இந்த நிலையில் துல்கர் சல்மான் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி காந்தா படக்குழு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. இப்படத்தில் துல்கர் சல்மானை தவிர்த்து சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போஸ் ஆகியோர் நடித்துள்ளனர். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். இவர் நெட்ஃபிலிக்ஸில் வெளியான ‘ஹண்ட் ஃபார் வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸை இயக்கியவர். இப்படத்தை நடிகர் ராணா டகுபதி, துல்கர் சல்மான் உள்ளிட்ட இன்னும் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஜானு சாந்தர் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரியில் துல்கர் சல்மான் 13ஆண்டு சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டது. பிளாக் அண்ட் ஒயிட் காகலட்டத்தில் படம் உருவாகுவ்தாக போஸ்டர் அமைந்திருந்தது.
படத்தின் டீசரை பார்க்கையில், மாடர்ஸ் ஸ்டூடியோஸ் பேனரில் முதல் தமிழ் பேய் படமாக ‘சாந்தா’ என்ற படம் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படத்தினுள் படம் என்ற கான்செப்டில் படம் உருவாகிறது. தொடர்ந்து டீசரில், சாந்தா படத்தை சமுத்திரக்கனி இயக்குவதாகவும் துல்கர் சல்மான் நடிப்பதாகவும் காட்டப்படுகிறது. ஆனால் இருவரும் ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக சரியாக பேசிக்காமல் இருக்கிறார்கள். பின்பு ஃப்ளாஷ்பேக்கில் பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டத்தில் இருவரும் நெருங்கிய நண்பராக இருக்கும் காட்சிகள் காட்டப்படுகிறது. அதில் துல்கர் சல்மானுக்கு சமுத்திரக்கனி குருவாக இருந்து நடிப்பு சொல்லித்தருகிறார். ஆனால் பின்பு ஏதோ ஒரு காரணத்தால் இருவரும் பிரிய அந்த பகை அவர்கள் இணைந்து பணியாற்றும் சாந்தா படத்தில் எதிரொலிக்கிறது. ஒரு காட்சியில் துல்கர் சல்மானை சமுத்திரக்கனி பார்த்து, ‘நடிப்பு சக்ரவர்த்தி... ஆரம்பமே அமர்க்களமா இருக்கு’ என கிண்டலடிக்கும் வகையில் பேசுகிறார்.
இதையடுத்து துல்கர் சல்மான் இயக்குநர் சமுத்திரக்கனி வேலையை தானே செய்கிறார். ஒரு படி மேலே போய், படத்தின் பெயர் சாந்தா இல்லை காந்தா என மாற்றுகிறார். இத்துடன் டீசர் முடிவடைகிறது. இதனால் இருவருக்குள் இருக்கும் ஈகோவை வைத்து பீரியட் டிராமா ஜானரில் இப்படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.