மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியாகியுள்ள படம் ‘லோகா சாப்டர் 1; சந்திரா’. இப்படத்தை துல்கர் சல்மானின் ‘வேஃபாரர் ஃபிலிம்ஸ்’ தயரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. டாமினிக் அருண் இயக்கியுள்ள இப்படத்தில் நஸ்லன், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படம், கடந்த 29ஆம் தேதி தமிழ், உள்ளிட்ட இன்னும் சில மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. 5 நாட்களில் ரூ.81 கோடி வசூலைக் கடந்து தற்போது ரூ.100 கோடி வரை வசூலித்துள்ளது. இதன் மூலம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் முதல் முறையாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மேலும் ரசிகர்களின் வரவேற்பால் கூடுதல் திரை இப்படத்துக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கன்னடர்களைக் குறித்து படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் கர்நாடக மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்ததால் அதற்காக தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியது. மேலும் படத்தில் அந்த வசனம் நீக்குவதாக தெரிவித்தது.
இந்த நிலையில் படத்தின் தமிழ் வெர்ஷன் வெற்றி தொடர்பாக படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் அடுத்தடுத்த பாகங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இப்படத்தை தமிழில் டப் செய்த பாலா சாருடன் தொடர்ச்சியாக பயணித்து வருகிறேன். ஒரிஜினல் படத்தை போல் தமிழில் அவர் டப் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தது. வரும் காலங்களிலும் அவருடன் நிறைய பணிபுரிவேன். இப்படத்தை 5 பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளோம். இன்னமும் அதிகரிக்குமா எனத் தெரியாது. ஆனால் அந்தளவிற்கான ஸ்கோப் கதையில் இருப்பதாலும் ரசிகர்களின் வரவேற்பும் அதிகமாக இருப்பதாலும் அடுத்தடுத்த பாகங்கள் குறித்து எங்கள் டீம் விவாதித்து வருகிறது. ஒவ்வொரு பாகத்திலும் இந்தப் படம் பெரிதாக மாறப்போகிறது.
படத்திற்கு இந்தளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சோசியல் மீடியாவில் போனாலே இந்த படத்தை பற்றித்தான் பேசுகிறார்கள். நிறைய படங்களில் நானும் நடித்திருக்கிறேன், ஆனால் இந்தளவு ஒரு கிரேஸ் பார்த்ததில்லை. அதனால் அடுத்தடுத்த பாகத்திற்கான பொறுப்பு எங்களுக்கு அதிகரித்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் எடுக்க வேண்டும். இந்த பட டீசர், ட்ரெய்லர் வந்த போது கூட யாருக்கும் பெரிதாக கதை புரியவில்லை. ஆனால் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடனே படம் டேக் ஆஃப் ஆனது. முதல் நாளில் தமிழ் ரசிகர்களும் மலையாள வெர்ஷனை பார்த்துவிட்டு சோசியல் மீடியாவில் பாராட்டினார்கள். அது பட வெற்றிக்கு உதவியது” என்றார்.