பிரதீப் ரங்கநாதன் தான் தொட்டதெல்லாம் வெற்றியாக மாற தமிழ் சினிமாவில் ராஜ நடை போட்டு வருகிறார். இவர் இயக்கிய கோமாளி, இயக்கி நடித்த லவ் டுடே, வெறும் நாயகனாக நடித்த டிராகன் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்று கோடிகளில் வசூல் குவித்தது. இதனாலேயே இவர் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் விரைவாக இணைந்து கொண்டார். இதன் காரணமாக இவரது படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி அடுத்ததாக டியூட் படம் மூலம் கோதாவில் குதித்து இருக்கிறார். தீபாவளி ரிலீஸ் ஆக வெளியாகி இருக்கும் டியூட் திரைப்படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்ததா, இல்லையா?

Advertisment

அமைச்சர் சரத்குமார் மகள் மமிதா பைஜூ தன்னுடைய அத்தை மகனான பிரதீப்ரங்கநாதனை காதலித்து அவருக்கு ப்ரபோஸ் செய்கிறார். நாயகன் பிரதீப் ரங்கநாதன் முதலில் காதலை மறுத்து பின் சில மாதங்கள் கழித்து அவரும் காதலில் விழ அந்த நேரம் பார்த்து மமீதா பைஜூ தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஹிர்து ஹாரூனை காதலித்து விடுகிறார். இந்த காதலுக்கு ஜாதி வெறி பிடித்த சரத்குமார் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் காதலர்கள் ஒன்று சேர சிக்கல் ஏற்பட அதை தான் சரி செய்வதாக பிரதீப் ரங்கநாதன் மமிதாவின் காதலுக்கு பொறுப்பேற்கிறார். தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் காதலியை அவளது காதலனுடன் பிரதீப் சேர்த்து வைக்க யாரும் யோசிக்காத விபரீதமான ஒரு புதுமையான முயற்சியை மேற்கொள்கிறார். அதில் அவருக்கு வெற்றி கிட்டியதா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

Advertisment

ஒரு வழக்கமான காதல் கதையை வைத்துக்கொண்டு இதுவரை தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே யாருமே யோசிக்காத ஒரு விபரீதமான கதை அம்சம் கொண்ட புதுமையான சபையை இந்த கால ஜென் சி யூத்துகளுக்கு பிடித்தார் போல் கலகலப்பான இளமை துள்ளலான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன். பிரதீப் ரங்கநாதன் படங்களுக்கே உரித்தான கலகலப்பான காட்சி அமைப்புகள் யூத் ஃபுல்லான காதல் காட்சிகள் அதே சமயம் ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பு மக்கள் ரசிக்கும் வகையிலான காட்சிகள் என படம் ஆரம்பித்து முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகர்ந்து கலகலப்பான படமாக முடிந்து ரசிக்க வைத்திருக்கிறது. படத்தின் முதல் பாதி ஆரம்பித்து படு வேகத்தில் பயணித்து இரண்டாம் பாதியில் இருந்து சற்று சில பல ஸ்பீடு பிரேக்கர்கள் போட்டு மீண்டும் வேகம் எடுக்கும் திரைப்படம் இறுதி கட்ட காட்சிகளில் பரபரப்பாக நகர்ந்து முடிந்து இருக்கிறது.

குறிப்பாக இன்டர்வல் பிளாக் சூப்பர் லெவல். ஆனால் எப்படி இன்டெர்வல் பிளாக் ஒரு ஹைப் கொடுத்ததோ அதேபோன்ற ஹைப்பை கிளைமாக்ஸ் கொடுக்க தவறி இருப்பது மட்டும் சற்றே டிஸ்அப்பாயிண்ட் செய்திருந்தாலும் ஓவர் ஆளாக ஒரு படமாக பார்க்கும் பட்சத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த கால 2கே கிட்ஸ்களுக்கு ஏற்றார் போல் யூத் ஃபுல்லான படமாக இந்த டியூட் படம் அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது. படத்தில் சொல்லப்பட்ட விஷயம் ஆரம்பத்தில் சற்றே கிரிஞ்சாக தென்பட்டு போக போக சமூகத்துக்கு ஒரு அவசியமான விஷயமாக இருந்தாலும் அதை விபரீதமான முறையில் கூறியிருப்பது இளைய தலைமுறைக்கு வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கலாம் ஆனால் முந்தைய தலைமுறைக்கு அது எந்த அளவு ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கிறது என்பது போகப் போக தான் தெரியும். 

Advertisment

பிரதீப் ரங்கநாதன் வழக்கம் போல் தனக்கு ட்ரேட் மார்க் நடிப்பை இந்த படத்திலும் கொடுத்து கைதட்டல் மற்றும் விசில் சத்தத்தை சிறப்பான முறையில் பெற்றிருக்கிறார். பிரதீப்புக்கே உரித்தான காட்சி அமைப்புகள் சிறப்பான முறையில் செதுக்கியிருப்பது தியேட்டர்களை கைத்தட்டல்களால் அதிர செய்திருக்கிறது. இந்த கால இளைஞர்களின் கணவன் நாயகனாக இருக்கும் பிரதீப்ரங்கநாதன் அதை சிறப்பான முறையில் இந்த படத்திலும் தக்க வைத்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருக்கிறார். படத்தின் நாயகி மமீதா பைஜூ ஆரம்பத்தில் சற்று கிரிஞ்சாக நடித்திருந்தாலும் போகப்போக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் பெரிய கவனம் ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்தப் படத்தின் நாயகி கதாபாத்திரத்திற்கு மமீதா பைஜூ சிறப்பான தேர்வு. ஜாதி வெறி பிடித்த அரசியல்வாதியாக வரும் சரத்குமார் நீண்ட நாட்களுக்குப் பிறகு கலகலப்பான நடிப்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி அதனுடன் வில்லத்தனத்தையும் காட்டி கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்து கவனம் பெற்று இருக்கிறார். பொதுவாக சத்யராஜ் இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அதகளப்படுத்துவார். ஆனால் இந்த முறை அதை சரத்குமார் சிறப்பாக செய்து தன்னாலும் எப்படியும் நடித்து பெயர் வாங்க முடியும் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கிறார். பிரதீப்பின் அம்மாவாக வரும் ரோகிணி சில காட்சிகளை வந்தாலும் மனதில் பதிகிறார். பிரதீப் நண்பராக வரும் டிராவிட் குணச்சித்திரன் நடிப்பில் மிளிர்கிறார். ஹர்து ஹாரூன் படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் வருகிறார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். அவர் இதுவரை ஏற்றிடாத ஒரு வேடம் அவை சிறப்பான முறையில் செய்து இருக்கிறார். மற்றபடி படத்தில் நடித்த மற்ற அனைத்து கதாபாத்திரங்களுமே அவர் ஒரு வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். 

சாய் அபியங்கர் இசையில் ஊரும் பிளட் பாடல் பிளாக்பஸ்டர் ஹிட். அதுவே படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக மாறி ரசிகர்களை இழுத்து இருக்கிறது. அதேபோல் பின்னணி இசையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். அடுத்த அனிருத் என பெயர் வாங்கியிருக்கும் இவர் இசையை அதிகமாக வாசிப்பதை நிறுத்திவிட்டு தேவைப்படும் இடங்களில் மட்டும் வாசித்தால் அந்த பெயரை தக்கவைத்துக் கொள்ளலாம். நிகேத் பொம்மி ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல். இந்த கால இளைஞர்களுக்கு ஏற்றார் போல் காட்சிகளை நேர்த்தியாக படம் பிடித்து காட்டியிருக்கிறார். 


ஒரு பெண்ணுக்கு தாலி என்பது எவ்வளவு முக்கியம் என்ற காலம் மாறி தற்பொழுது தாலிக்கு பின்னால் இருக்கும் பெண்ணின் பீலிங்ஸ் தான் முக்கியம் என்ற ஒற்றை வரி கதையை எடுத்துக்கொண்டு இந்த கால யூத்துகளுக்கு ஏற்றார் போல் விபரீதமான ஒரு விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் என்று போற போக்கில் சற்றே கிரிஞ்சு கலந்து கலகலப்பான படமாக கொடுத்து பார்ப்பவர்களிடம் கைத்தட்டல் பெற்று படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இந்த டியூட்.


டியூட் - விபரீதமானவன்