bairavi

Advertisment

பிரபல மருத்துவர் பைரவி செந்திலிடம் எடுத்துக்கொண்ட ஃபேஷியல் சிகிச்சை காரணமாக தன்னுடைய முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டிய நடிகை ரைசா, சிகிச்சைக்குப் பிறகான தன்னுடைய புகைப்படத்தையும் பகிர்ந்து பெரும் பரபரப்பைக் கிளப்பினார். அதன் பிறகு, இரு தரப்புகளும் மாறிமாறி நஷ்டஈடு கோரி வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவர் பைரவி செந்தில்ரைசா விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து முதல்முறையாக விளக்கமளித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய பைரவி செந்தில், "இந்த சிகிச்சையை ரைசா எடுத்துக்கொள்வது இது முதல்முறையல்ல. அவர்இதே சிகிச்சைக்காக மூன்றுமுறை எங்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளார். எங்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாகவே 10 ஆண்டுகளாக இதே சிகிச்சையை அவர் எடுத்துவந்துள்ளார். எங்களிடம் முதல்முறை கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலும், இரண்டாவது முறை இந்த ஆண்டு மார்ச் மாதத்திலும், மூன்றாவது முறை கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியும் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இது சாதாரண ஃபேஷியல் சிகிச்சையல்ல. இந்த சிகிச்சைக்குப் பிறகு முகத்தில் வீக்கம் ஏற்படுவது இயல்பானதே. இந்த சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன. அதன்படி, புகைபிடிக்க கூடாது; மது அருந்தக் கூடாது; கடினமான உடற்பயிற்சி செய்யக்கூடாது என்றெல்லாம் அவரை அறிவுறுத்தினோம். அவர் சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டதும், மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வழக்கறிஞர் மூலமாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அவர் எங்களிடம் நஷ்டஈடாக ஒரு கோடி கேட்டதை ஊடகங்களில் பார்த்து தெரிந்துகொண்டோம். தற்போது மானநஷ்ட ஈடாக ஐந்து கோடி ரூபாய் கோரி அவர் மீது வழக்கு தொடுத்துள்ளோம்" எனக் கூறினார்.