Skip to main content

“இந்த கவுரவம் மகத்தானது” - சூர்யாவிற்கு எம்.எல்.ஏ பாராட்டு

Published on 29/06/2022 | Edited on 30/06/2022

 

dmk mla Selvaperunthagai praised surya oscars academy membership

 

உலகளவில் திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான 94-வது ஆஸ்கர் விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில் வில் ஸ்மித்தின் நடவடிக்கை பெரும் பேசும் பொருளாக மாறி, பின்பு வில் ஸ்மித் 'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பின் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இது அங்கு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 

 

இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பில் சேர உலகளவில் 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பட்டியலில்  இந்தியாவிலிருந்து சூர்யா, பாலிவுட் நடிகை கஜோல், இந்தி இயக்குநர் ரீமா காட்டி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சூர்யாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பல திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

அந்தவகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகையும் சூர்யாவைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர். இந்த கவுரவம் மகத்தானது. நடிகர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வயநாட்டில் ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த செல்வப்பெருந்தகை!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
selvaperunthagai who collected votes in support of Rahul Gandhi in wayanad!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை ஆதரித்து சுல்தான் பத்ரி தேர்தல் பொறுப்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் தலைமையில் தமிழநாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சுல்தான் பத்ரீ கடைவீதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கோவை மணிகண்ட பிரசாத்,  சிந்தை வினோத் மற்றும் ஏராளமான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story

“ஜூம்லா நாடகத்தை மீண்டும் அரங்கேற்றியிருக்கிறது பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கை” - செல்வப்பெருந்தகை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
TN Congress leader Selvaperunthagai has slammed BJP election manifesto

டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். அதில், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் அமல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூம்லா நாடகத்தை மீண்டும் பா.ஜ.க. அரங்கேற்றியிருக்கிறது. 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க. 2024 தேர்தலுக்கு முதல்கட்ட தேர்தல் தொடங்கி அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அவற்றைப் பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, மதநல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் உள்ளன.

பல்வேறு மதம், மொழி, ஜாதி, இனங்களை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும். தற்போது நடைபெறுகின்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 இல் ஆரம்பித்து ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிற நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என்பதை பிரதமர் மோடி தான் விளக்க வேண்டும்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை அழைக்காமல் புறக்கணித்த பா.ஜ.க.வினர் 2025 ஆம் ஆண்டை பழங்குடியினர் ஆண்டாக கொண்டாடுவோம் என்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும். ஏற்கெனவே ஆயுஷ்மான் திட்டத்தில் ஊழல் புரையோடிப் போயிருக்கிற நேரத்தில் மீண்டும் அத்திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. நிதி ஒதுக்குவதில் தமிழ் மொழியை விட 18 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிற பா.ஜ.க., தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. இதன்மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. தேர்தல் நன்கொடை பத்திரம் மூலமாக ரூபாய் 8,000 கோடி கார்ப்பரேட்டுகளிடம் நிதியைப் பெற்று குவித்த பா.ஜ.க., ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது மிகுந்த கேலிக்குரியதாக இருக்கிறது.

வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை. தமிழகத்தில் மெட்ரோ ரயிலை புறக்கணித்த பா.ஜ.க.வை எவரும் மறந்திட இயலாது. மோடியின் உத்திரவாதம் நம்பகத் தன்மையை இழந்துள்ளது. ஏற்கனவே 2014 இல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டப்படும், கருப்பு பணத்தை ஒழித்து அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற உத்திரவாதத்தை நிறைவேற்றாத மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள்.

தேர்தல் அறிக்கையை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஜாதிவாரியாக கணக்கெடுத்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்காத பா.ஜ.க., டாக்டர் அம்பேத்கர் பெயரை உச்சரிக்கத் தகுதியில்லை.

எனவே, மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பா.ஜ.க. கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்.

கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிகழ்த்திய ஜூம்லா நாடகத்தை மீண்டும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு அரங்கேற்றியிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.