
கரோனா அச்சுறுத்தலால் கடந்த எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், உரிய பாதுகாப்பு வசதிகளுடன் 50 சதவித இருக்கைகளை கொண்டு மீண்டும் திரையரங்குகளை இயக்க அனுமதி வழங்கியது மத்திய அரசு. இதனை தொடர்ந்து நவம்பர் 5ஆம் தேதி முதல் மும்பையில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், திரையரங்கிற்கு பார்வையாளர்கள் பெரிதாக வரவில்லை.
இந்நிலையில் ரசிகர்களை மீண்டும் திரையரங்குக்கு வரவழைக்க, கபீ கபீ, ஸில்ஸிலா, தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, தில் தோ பாகல் ஹாய், வீர் ஸாரா உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை, ஒய் ஆர் எஃப் பெரிய திரைக் கொண்டாட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் வெளியிடுகின்றனர். யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் 50வது வருடம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளுக்கு உதவும் வண்ணம் இந்தத் திரைப்படங்கள் எதற்கும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தரப்பு கட்டணம் எதுவும் வசூலிக்கப்போவதில்லை. யாஷ் ராஜ் தரப்பும், விநியோகஸ்தர்களும், மீண்டும் மக்கள் திரையரங்குக்கு வர வேண்டும் என்று விரும்புவதால் இந்த அத்தனை பழைய படங்களுக்கும் ரூ.50 மட்டுமே டிக்கெட் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் மனன் மேத்தா தெரிவிக்கையில், "எங்கள் தயாரிப்பு நிறுவனத்தை பொருத்த வரை மக்களின் மகிழ்ச்சி தான் எங்கள் உலகின் மையப் புள்ளி. எங்களது 50வது வருடத்தை முன்னிட்டு இந்தப் பெரிய திரைக் கொண்டாட்டத்தை நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இப்போது ரசிகர்கள் எங்களின் பல பிரபலமான, மறக்க முடியாத திரைப்படங்களை மீண்டும் பெரிய திரையில் பார்த்து அந்த அனுபவத்தில் திளைக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.