கன்னட நடிகரான தர்ஷன், விஜயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் தர்ஷன் தன்னை மிரட்டி அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறி விஜயலட்சுமி பிரிந்து சென்றுள்ளார். அதே சமயம் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகையும், மாடலுமான பவித்ரா கௌடாவுடன் தர்ஷன் பழகி வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். தர்ஷனின் ரசிகரான ரேணுகா சாமி, தர்ஷனும் - விஜயலட்சுமியும் பிரிந்ததற்கு பவித்ராதான் காரணம் என்று பவித்ராவின் இன்ஸ்டாகிரமில் ஆபாசமாகப் பேசி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் பவித்ரா பிரிந்து சென்றால்தான் தர்ஷனும், விஜயலட்சுமியும் ஒன்றாக வாழ்வார்கள் எனக் கடுமையான வார்த்தைகளில் பேசி ஆபாசமான படங்களையும் குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறார்.
இதனைப் பவித்ரா தர்ஷனிடம் சொல்ல, தனது ஆட்களை வைத்து ரேணுகா சாமியைக் கடத்தி கொலை செய்துள்ளார் தர்ஷன். இந்த வழக்கு தொடர்பாக தர்ஷன், பவித்ரா உள்ளிட்ட கொலை செய்த 17 நபர்கள் கைது செய்யப்பட்டனர். பின்பு சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். தர்ஷனின் ஜாமீனை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கன்னட நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, சாதாரண குடும்பத்திற்கு உச்ச நீதிமன்றம் தான் நம்பிக்கை, ரேணுகா சாமி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரது கருத்திற்கு தர்ஷனின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆபாசமாக ரம்யாவுக்கு மெசேஜ் செய்துள்ளனர். மேலும் மற்றொரு பதிவில், இந்த விவகாரம் தொடர்பாக தர்ஷனின் ரசிகர்கள் குறித்து பதிவிட, மீண்டும் தர்ஷனின் ரசிகர்கள் ரம்யாவை சாடியுள்ளனர். குறிப்பாக ஆபாச மெசேஜ்கள் தொடர்ந்து அனுப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடுப்பான ரம்யா, “ரேணுகா சாமி மெசேஜுக்கும் தர்ஷன் ரசிகர்களின் மெசேஜுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பெண்களை வெறுக்கும் மனநிலையைக் கொண்ட இவர்களின் ட்ரோல்களால் தான், பெண்கள் துன்புறுத்தலுக்கும், பாலியல் வன்கொடுமைக்கும், கொலைக்கும் ஆளாக்க வழிவகுக்கிறது” என தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஆபாச மெசேஜ் அனுப்பிய தர்ஷனின் ரசிகர்கள் பெயர்களையும் பகிர்ந்துள்ளார். முன்னதாக தர்ஷன் கைதான போது சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது என ரம்யா பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.