
மைசூர் சாண்டல் சோப்பை தயாரிக்கும் கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட்(KSDL) நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டார். இரண்டு வருடத்துக்கு ரூ.6.20 கோடி சம்பளம் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கர்நாடக தொழில் துறை அமைச்சர் பாட்டில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். கர்நாடக அரசின் இந்த முடிவிற்கு கன்னட மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவாகியது. கன்னட திரையுலகில் திறமையான நடிகைகள் இல்லையா? ஏன் பாலிவுட் நடிகையான தமன்னாவை நியமிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இதை தொடர்ந்து கன்னட அமைப்புகளும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் பாட்டில், கர்நாடகாவைத் தாண்டி மற்ற சந்தையிலும் மைசூர் சாண்டல் வலுப்பெறவே இந்த முடிவு என விளக்கமளித்திருந்தார். இருப்பினும் தமன்னா நியமனத்திற்கு எதிர்ப்பு தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் கன்னட நடிகையும் அம்மாநில மண்டியா மக்களவை தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ரம்யா எனும் திவ்யா ஸ்பந்தனா தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “KSDL-ஐ மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கத்தைப் பாராட்டுகிறேன், ஆனால் அதை செயல்படுத்தும் முறை வெறும் கண்துடைப்பு போல தெரிகிறது. மைசூர் சாண்டல் சோப்பு ஒரு மிகப்பெரிய பாரம்பரியத்தைக் கொண்டிருந்தாலும், வணிகக் கண்ணோட்டத்தில் அதற்கு ஒரு விளம்பர தூதர் தேவையில்லை.

வடக்கு மாநிலத்தில் சோப்பின் மார்கெட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் கன்னடரல்லாத ஒருவரை விளம்பர தூதராக நியமித்ததன் மூலம், இந்த அரசு தன் சொந்த மக்களை, குறிப்பாக சோப்பின் விசுவாசமான வாடிக்கையாளர்களை அந்நியப்படுத்தியுள்ளது. நாம் நமது கன்னட பெருமையைத் தக்க வைத்துக் கொள்ள போராடும் நேரத்தில் இந்த மாதிரியான முடிவு நம்மைத் தோல்வியடையச் செய்கிறது. பெண்கள் பல நூற்றாண்டுகளாக வாக்களிக்கும் உரிமைகள் முதல் சம ஊதியம் வரை போராடி வருகின்றனர். மேலும் இங்கே இன்னும் சரியான சருமம் என்பது லட்சியமானது என்று நமக்குச் சொல்லப்படுகிறது. மைசூர் சாண்டல் சோப்பின் வலிமை, அதன் தொடர்புத் தன்மையில் உள்ளது. இது குறித்து தெரியாதவர்கள் தான் இப்போது முடிவு எடுத்திருக்கிறார்கள். இது தெளிவாக தெரிகிறது” என்றார்.