
சத்யராஜ் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். பின்பு அவருக்கு தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் மாநில துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து வழக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தொழில் சம்பந்தமாக பதிவிட்டு வரும் திவ்யா சத்யராஜ் தொடர்ந்து அரசியல் தொடர்பான கருத்துகளையும் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் புதிய அரசியல் கட்சிகள் அரசியலில் பெண்களை மதிப்பதில்லை எனக் குறிப்பிட்டு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், “என்னிடம் உங்களுக்கு அஜித் பிடிக்குமா இல்லை விஜய் பிடிக்குமா என மக்கள் கேட்டால் நான் எப்போதும் அஜித் தான் பிடிக்கும் என சொல்வேன். அவர் ஒரு சிறந்த நடிகர், அதைவிட முக்கியமாக பெண்களை மதிப்பவர். அவர் ஒரு குடும்பத் தலைவர், தனது வாழ்க்கையில் பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார். அதையே அவரது ரசிகர்களும் பின்பற்றுகிறார்கள். அஜித் சாரின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பெண்களைத் துஷ்பிரயோகம் செய்வதில்லை, அவர்கள் கோழைகள் அல்ல, கண்ணியத்துடனும், தரத்துடனும் நடந்து கொள்கிறார்கள்.
அஜித் சார் ஒருபோதும் தனது ரசிகர்கள் ஆன்லைனில் பெண்களை அச்சுறுத்துவதை அல்லது அவமதிப்பதை அனுமதிக்கவே மாட்டார். விளம்பரம் தேடாமல் அமைதியாக பலருக்கு அவர் உதவி செய்துள்ளார். பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது துஷ்பிரயோகங்களைப் பற்றி ஊக்குவிக்கும் அல்லது அமைதியாக இருக்கும் எந்தவொரு தலைவரும் உண்மையான தலைவர் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவர் என்று நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.