இந்து மத சாமியாரான அனிருதாச்சார்யா மகாராஜ், சமீபத்தில் 25 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் இருக்கும் பெண்கள், திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் அவர்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று விமர்சித்திருந்தார். இது பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குக் கண்டனம் தெரிவித்த இந்திய இராணுவத்தின் முன்னாள் மேஜரும், பாலிவுட் நடிகை திஷா பதானியின் சகோதரியுமான குஷ்பு, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருவரும் ஒப்புக்கொண்டு இருக்கும் போது பெண்களை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்? என்று விமர்சித்திருந்தார். பின்பு மற்றொரு இந்து மத சாமியாரான பிரேமானந்த்ஜி குறித்தும் குஷ்பு அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

Advertisment

இதையடுத்து அனைத்துப் பெண்களையும் நான் கூறவில்லை என்றும் எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றும் முதலில் பேசிய அந்த மத சாமியார் விளக்கமளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து குஷ்பு, தான் முதலில் பேசிய சாமியாருக்குத்தான் விளக்கமளித்தேன் எனவும் இன்னொரு சாமியார் குறித்து பேசவில்லை என்றும் விள்ளக்கமளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து உத்தர பிரதேசம், பரேலி மாவட்டத்தில் உள்ள திஷா பதானி வீட்டில் இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது வீட்டில் திஷா பதானி இல்லை. அவரது சகோதரி குஷ்பு, தந்தை மற்றும் தாயார் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பரேலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 

பின்பு இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு கனடாவைத் தலைமையாகக் கொண்ட கோல்டி பிரார் கேங் பொறுப்பேற்றது. அவர்களது மதப் பிரமுகர்களான பிரேமானந்த் மகாராஜ் மற்றும் அனிருதாச்சார்யா மகாராஜ் பற்றி திஷா பதானி மற்றும் அவரது சகோதரி இருவரும் இழிவுபடுத்திப் பேசியதற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு தாக்குதல் என தெரிவித்தது. இதனை அந்தக் கேங்கில் இருக்கும் ரோஹித் கோதரா என்பவர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இன்னொரு முறை யாராவது எங்கள் மதத்தை பற்றி இழிவாக பேசினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக துப்பாக்கி சூடு நடத்திய இரண்டு பேரை ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில் அந்த இரண்டு மர்ம நபர்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இருவரும் உத்தர பிரதேச காஜியாபாத் எல்லையில் நடமாடி கொண்டிருப்பதாக ஹரியானா சிறப்புப் படையினருக்கு டெல்லி காவல் துறையினர் தகவல் கொடுத்தனர். இதனால் காஜியாபாத் எல்லையில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டது. அப்போது குற்றவாளிகளை சுற்றி வளைத்து கைது செய்ய காவல்துறையினர் முயன்றுள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க இருவரும் முயன்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவரும் காயமடைந்துள்ளனர். பின்பு பலியாகியுள்ளனர். குற்றவாளிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் டெல்லி காவல் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இருவரும் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் ரோஹ்தக் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் என்றும் இன்னொருவர் சோனிபட்டை பகுதியை சேர்ந்த அருண் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இருவரும் ஒரு முக்கிய வெளிநாட்டு குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறியுள்ளனர்.