Skip to main content

ஆண்ட்ரியா சொன்ன ஒற்றை வார்த்தையால் நிறுத்த நினைத்த ஷூட்டிங்கை நடத்தினோம் -  'நோ எண்ட்ரி' பட இயக்குநர் பேட்டி

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

Director Alagukarthik

 

அழகு கார்த்திக் இயக்கத்தில் ஆண்ட்ரியா, ரன்யா ராவ், ஆரவ் கண்ணதாசன், மானஸ், ஜெய ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'நோ எண்ட்ரி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் அழகு கார்த்திக்கை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"வித்தியாசமாக ஏதாவது படம் பண்ணலாம் என்று நினைத்தபோது காடு, நாய்களை மையப்படுத்தி ஒரு படம் பண்ணலாம் என்று முடிவெடுத்தேன். சின்ன படமாக ஆரம்பித்தது ஆண்ட்ரியா மேடம் வந்தவுடன் பெரிய படமாகிவிட்டது. மேகலாயாவின் சிரபுஞ்சியில்தான் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பு அனுபவமே ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது. உலகத்திலேயே அதிக மழை பெய்யக்கூடிய இடம் சிரபுஞ்சி. எப்பவுமே அங்கு குளிர்ச்சியாக இருக்கும். எவ்வளவு நேரம் வேலை பார்த்தாலும் டயர்டே ஆகாது, வேர்வையே வராது.  

 

படத்தில் மழை வருவதுபோல ஒரு காட்சி இருக்கும். அதற்காக செயற்கையாக ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், அந்தக் காட்சி எடுக்க ஆரம்பிக்கும் முன் இயற்கையாவே மழை வந்துவிட்டது. லேசாக பெய்ய ஆரம்பித்த மழை ஒருகட்டத்தில் மோசமாக பெய்ய ஆரம்பித்துவிட்டது. எல்லோருமே ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு கிளம்பலாம் என்று முடிவெடுத்தபோது ஆண்ட்ரியா மேடம்தான் இதைத்தானே நாம எதிர்பார்த்தோம். ஷூட்டிங் பண்ணலாம் என்றார். மழை என்றால் நம் ஊரில் பெய்யும் மழைபோல இருக்காது. பயங்கரமான காற்றுடன், பிரம்மாண்டமான மழைத்துளிகளாக விழும். அவ்வப்போது மரம் சாய்ந்து விழும். ரொம்பவும் பயத்துடன்தான் ஷூட்டிங் நடத்தினோம். படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அது பிரம்மாண்டமாக தெரியும். 

 

படத்தில் 15 நாய்கள் நடித்திருக்கின்றன. 25 நாட்கள் அந்த நாய்களுக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தோம். மேகாலயாவில் செட் மட்டுமே 60 லட்ச ரூபாய் செலவில் போட்டோம். அந்த ஊர் உணவு ஒத்துக்கொள்ளாது என்பதால் நம் ஊரிலிருந்து 15 டன் உணவுப்பொருட்கள் எடுத்துச் சென்றோம். 

 

படத்தில் ஆண்ட்ரியா சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் எங்களைவிட அவர்தான் அதிக ஆர்வமாக இருந்தார். எங்களுக்கு முன்னாடியே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிடுவார். டபுள் டக்கர் ப்ரிட்ஜ் என்று ஒரு பாலம் உள்ளது. முழுக்க  முழுக்க மரத்தின் வேரினால் உருவான அந்த பாலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 4500 படிகள் கீழே இறங்க வேண்டும். 4500 படிகள் தவிர நிறைய கரடுமுரடான பாதைகளை தாண்டித்தான் செல்ல வேண்டும். அந்த இடத்தில் இரண்டு ஷாட் மட்டும்தான் எடுக்க முடிந்தது. இரண்டரை மணி நேரம் இறங்கி அந்த இடத்திற்கு சென்று, பின் மீண்டும் ஏறி வர 5 மணி நேரம் ஆனது. அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தாலும் அந்த பாலத்தை படத்தில் காட்டியதில் ரொம்ப சந்தோசம். 

 

நிறைய படம் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிடுவோம். ஆனால், இந்தப் படத்தை பார்த்தால் இது எந்த ஊரு, என்ன இடம் என்று ஒரு பிரமிப்பு ஏற்படும். நாய்கள் வரும் காட்சியை பார்க்கும்போதே பயம் ஏற்படும். 2 மணிநேரம் படத்தில் ஒரு மணி நேரம் சி.ஜி.தான். ஆனால், படம் பார்க்கும்போது எது உண்மை, எது சி.ஜி. என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது". இவ்வாறு இயக்குநர் அழகு கார்த்திக் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்