சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து ஏப்ரல் 13-ஆம் தேதியன்று திரைக்கு வரவிருக்கும் படம் 'பீஸ்ட்'. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஏப்ரல் 14-அன்று கன்னட நடிகர் யாஷ் நடித்து பிரசாந்த் நீல் இயக்கியுள்ள 'கே.ஜி.எப் 2' படம் ரிலீஸாக இருக்கிறது. இரண்டு படங்களுமே தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கிறது.
அடுத்தடுத்த தேதிகளில் இரண்டு படங்களும் வெளியாவதால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து 'கே.ஜி.எப் 2' படத்தினுடைய ட்ரைலர் நிகழ்ச்சியில் யாஷ் பேசுகையில் "இரண்டு படங்களும் போட்டி போடவில்லை. இது தேர்தல் கிடையாது சினிமா. மக்கள் இரண்டையும் ரசிப்பார்கள்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் 'கே.ஜி.எப் 2' படத்தினுடைய ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்று வருகிறது. தற்போது பீஸ்ட் படத்தினுடைய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் 'கே.ஜி.எப் 2' பட ட்ரைலரைபார்த்துள்ளார். இதுகுறித்து நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், " 'கே.ஜி.எப் 2' ட்ரைலர் மாஸாக இருக்கிறது. படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'கே.ஜி.எப் 2' படத்தினுடைய இயக்குநர் பிரசாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் "நெல்சன் திலீப்குமாருக்கு நன்றி. விஜய் சாரை திரையில் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.