Advertisment

விஜய் ஓகே சொன்னாலும் இமேஜ் பற்றி கவலைப்பட்ட எஸ்.ஏ.சி - ப்ரியமுடன் பட அனுபவம் பகிர்ந்த இயக்குநர் வின்சென்ட் செல்வா 

 Vincent Selva

Advertisment

நடிகர் விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் வின்சென்ட் செல்வா, ப்ரியமுடன் படப்பிடிப்பு அனுபவம் குறித்து நக்கீரனுடனான முந்தைய நேர்காணலில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் இருந்து ஒரு சிறு பகுதி...

"காதல் கொண்டேன் படத்தில் எங்கு போகக்கூடாது என்று நினைத்தேனோ அங்கு வந்துள்ளேன் என்று ஒரு வசனம் இருக்கும். நான் சினிமாவிற்கு வந்ததும் அதுபோலத்தான். எங்கள் வீட்டில் அனைவரும் சினிமா பார்க்கச் செல்லும்போதுகூட அவர்களிடம் காசை மட்டும் வாங்கிக்கொண்டு நான் வீட்டிலேயே இருப்பேன். சினிமாவே பார்க்காத ஆள்தான் நான். எங்கள் வீட்டு பக்கத்தில் உதவி ஒளிப்பதிவாளர் ஒருவர் இருந்தார். சினிமா செட்டில் நடந்தது, அவர் பார்த்த படங்கள் என நிறைய விஷயங்கள் என்னிடம் கூறுவார். அவரிடம் பேசிப்பேசிதான் எனக்கு சினிமா ஆர்வம் வந்தது. முதலில் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஆனால், இன்ஸ்டிடியூட்டில் டைரக்க்ஷன் படிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. அங்கு படித்துக்கொண்டிருந்த போது 'மண்ணில் இந்தக் காதல்' என்று ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்தேன். அந்த ஷார்ட் ஃபிலிம் எடுத்ததற்காக எனக்கு பாலச்சந்தர் சார் கையால் கோல்டு மெடல் கிடைத்தது.

நடிகர் விஜய்யை முதலில் சந்தித்தபோது அந்த ஷார்ட் ஃபிலிம்மை காட்டினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. பின், அவரிடம் ப்ரியமுடன் கதை சொன்னேன். படத்தில் விஜய்க்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு பக்கங்கள் இருக்கும். அந்த சமயத்தில் காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக ஹிட் கொடுத்த அவருக்கு நிறைய குடும்ப ரசிகர்கள் இருந்தனர். என்னுடைய இமேஜை பற்றியெல்லாம் பார்க்காமல் இந்தப் படத்தை எடுங்கள் என்று விஜய்கூறிவிட்டார். ஆனால், எஸ்.ஏ.சி சார் ஒத்துக்கொள்ளவேயில்லை. இயக்குநர் இன்ஸ்டிடியூட்டில் படித்துவிட்டு வந்தவர்... படத்தை பிரம்மாண்டமாக எடுப்பார் என்று கூறி எந்த தயாரிப்பாளரும் அந்த நேரத்தில் படத்தை தயாரிக்க முன்வரவில்லை. உடனே விஜய், இந்தப் படத்தை யார் தயாரிக்கிறார்களோ அவர்களுக்கு இன்னொரு படம் நடித்துக்கொடுக்கிறேன் என்றார். அந்த அளவிற்கு ப்ரியமுடன் படத்தில் ஈடுபாடுடன் இருந்தார். தயாரிப்பாளர் ஏதாவது சொன்னால் எனக்காக சென்று அவர் பேசினார்.

Advertisment

அதேபோல, க்ளைமேக்ஸில் விஜய் இறப்பது மாதிரி இருக்கும். அதற்கு விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டாலும், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் என்று கூறி எஸ்.ஏ.சி. சார் ஒத்துக்கொள்ளவில்லை. நான் இப்பதான் வளர்ந்துவரும் நடிகர்... பெரிய நடிகர்களோடு ஒப்பிடவேண்டாம். கதைக்காக இதைப் பண்ணுகிறேன். என்னுடைய கேரியரில் இப்படி ஒரு படத்தில் நடித்தேன் என்று இருக்கட்டும்அப்பா என்று விஜய் சார் கூறிவிட்டார்".

actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe