Skip to main content

"அங்காடித்தெரு படத்தின் கனவு மெல்ல நிறைவேறுகிறது..." தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் வசந்தபாலன்!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

Vasanthabalan

 

தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று சட்டமன்றத்தில் வெளியிட்டார். கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் வேலை நேரம் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்யும்போது பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகின்றனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு இந்தச் சட்டத்திருத்தமானது செய்யப்படவுள்ளது.

 

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த முடிவிற்கு இயக்குநர் வசந்தபாலன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள வசந்தபாலன், "தமிழக அரசுக்கு நன்றி. என் அங்காடித்தெரு திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. அங்காடித்தெரு திரைப்படத்தில் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றி கூறியிருப்பேன். உங்களுக்கு நினைவிருக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

அங்காடித்தெரு திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானபோது கடைகள் மற்றும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் நின்று கொண்டு வேலை செய்வது தொடர்பான விவகாரம் விவாதப்பொருளானது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வீரப்பன் குற்றவாளி என்றால்... காவல்துறையின் கொடூரம்?” - வசந்த பாலன்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
vasantha balan about koose munisamy veerappan series

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் கடந்த 14 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டுள்ள இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். சீசன் 2 விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஐஎம்டிபி ரேட்டிங்கில் 9.1 புள்ளிகள் பெற்றுள்ளது. மேலும் திரைப் பிரபலங்கள் ராஜேஷ் கண்ணா, சினேகன் உள்ளிட்டோர் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். 

அந்த வகையில் இயக்குநர் குமரன், சின்னத்திரை பிரபலம் ராஜு ஜெயமோகன், நடிகர் பால சரவணன் மற்றும் நடிகை வாணி போஜன் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இயக்குநர் வசந்த பாலன் இப்படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “ஜீ5-ல் வெளியாகியுள்ள வீரப்பன் தொடர் மிகவும் காத்திரமாக, நடுநிலையோடு, துணிச்சலாக எடுக்கப்பட்டுள்ளது. குரலற்ற, பாதிக்கப்பட்ட, உண்மையான மனிதர்களின் பேட்டியைக் காணும்போது தொடர் என்பதை மறந்து கண் கலங்குகிறது. ஹண்ட் ஃபார் வீரப்பன் (Hunt for veerappan) தொடர் ஒரு சார்பானதாகவும் அது ஒரு அரசியல் என உணர முடிந்தது. இந்த தொடர் வெளிவந்தது நல்தருணம். இந்த தொடரில் வீரப்பன் எழுப்பும் பல கேள்விகளுக்கு பதில் இல்லை நம்மிடம்.

நடிகனுக்கு இந்த தமிழ்நாட்டுக்காரனுங்க ஏன் ஓட்டு போடுறானுங்க. அரசியலைப் பத்தி அவங்களுக்கு என்ன தெரியும் என்று வீரப்பன் கேள்வி கேட்கும்போது, அத்தனை ஆண்டுகள் கழித்தும் விடை தெரியா சிரிப்பு கேள்வி. காட்டுக்குள் இருக்கும் முறையான படிப்பறிவு இல்லாத ஒருவனின் கேள்வி முக்கியமானது. இந்த தொடரைக் காணும்போது வீரப்பன் நல்ல கதைச் சொல்லியாகவும் நல்ல மேடை நடிகனாகவும் தோற்றமளிக்கிறான். வீரப்பன் குரல் பிசிறு இல்லாமல் பேட்டியில் வெளிப்படும்போது அவனிடம் இருந்த ஆளுமை வெளிப்படுகிறது. ஏகே 47 துப்பாக்கியை வைத்துக் கொண்டு அவன் நடித்துக் காட்டுவதையும் நடனம் ஆடுவதையும் பார்க்கும்போது சன்னதம் கொண்டாடும் வனதேவனைப் பார்ப்பது போல உணர்ந்தேன்.

வீரப்பன் யானைகளைக் கொன்று தந்தங்களை திருடியவன். சந்தன மரங்களைக் கடத்தியவன். அவன் குற்றவாளி என்றால் வாங்கியவன் யார்? வீரப்பன் தேடுதல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகளையும் காவல்துறை அதிகாரிகளையும் தன்னைக் காட்டிக் கொடுத்த கிராமத்தினரையும் கொன்றது மகா குற்றம் என்றால் தேடுதல் வேட்டையில் காவல்துறை மலைவாழ் மக்களைக் கொடூரமாகச் சித்திரவதைச் செய்ததையும், பெண்களை வன்புணர்வு செய்து தடாவில் சிறையில் அடைத்த கொடூரத்திற்கு என்ன பெயர் சூட்டுவது? முன்பே நக்கீரன் பத்திரிகையிலும் இணையத்தில் வந்திருந்தாலும் இணையத் தொடராக பார்க்கும்போது இலங்கையில் மட்டுமல்ல நம் தமிழகத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எந்த அரசும் செவி கொடுக்கவில்லை என்பது அநீதி. சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளியான பிறகும் நிவாரணத் தொகை இன்றைய தேதி வரை பாதிக்கப்பட்ட பலருக்கு சென்று சேரவில்லை என்ற தகவலை கேட்கும்போது கவலையளிக்கிறது.

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரின் வீடியோ வெளியானது. இருபக்க நியாயங்களையும் எடுத்து கூறியது இந்த இணையத் தொடரின் சிறப்பு. நக்கீரன் பத்திரிகை நிருபர்களுக்கும், நக்கீரன் ஆசிரியருக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்தொடரின் படக்குழுவினரான ஜெயச்சந்திர ஹாஷ்மி, பிரபாவதி ஆர்.வி., வசந்த் பாலகிருஷ்ணன், ஷரத் ஜோதி உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டினார்.  

Next Story

"உண்மையைச் சொன்னால் ஒரு கூட்டம் திட்டத் துவங்கிவிடும்" - வசந்தபாலன் வேதனை

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

vasantha balan about koolangal movie

 

அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருந்த படம் கூழாங்கல். லேர்ன் அண்ட் டீச் ப்ரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியது. இந்தப் படம் பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. மேலும் விருதுகளும் வென்றுள்ளது. 94வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்ப தேர்வு செய்யப்பட்டது. ஆஸ்கரின் இறுதி சுற்றுவரை சென்று பின்பு வெளியேறியது.

 

2021 ஆம் ஆண்டே இந்தப் படம் அனுப்பப்பட்டிருந்தாலும் வெளியாகாமலே இருந்தது. இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் சுதா கொங்கரா, "எனக்கு மிகவும் பிடித்த படம். மிகவும் பிடித்த இயக்குநரும் கூட" என குறிப்பிட்டு பாராட்டியிருந்தார். 

 

இந்த நிலையில் இப்படத்தை பார்த்து முன்னதாகவே பாராட்டு தெரிவித்திருந்த இயக்குநர் வசந்த பாலன், படம் குறித்து மற்றொரு பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில், "கூழாங்கல் திரைப்படம் சிறப்பான அனுபவம். ஆனால் வெறும் வாழ்த்துகளுடன் திரைக்கலைஞன் வாழ முடியாது. சிறிய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் இது கடுமையான தண்டனைக் காலம். மீள்கிறவர்கள் பாக்கியவான்கள். இப்படி சிறிய திரைப்படங்கள் சம்பந்தமான உண்மையைச் சொன்னால் வசந்தபாலன் எப்பொழுதும் கசப்பை முன் வைப்பார் என்று ஒரு கூட்டம் திட்டத் துவங்கிவிடும். லவ்டுடே ஓடலையா, டாடா ஓடலையான்னு ஒரு கூட்டம் புள்ளி விவரத்தை முன் வைக்கும். இதுவும் கடந்து போகும்" என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.