Sunder Rajan

இயக்குநரும் நடிகருமானசுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அனபெல் சேதுபதி'. இப்படத்தில் யோகிபாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி ஜானரில் ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்ட இப்படத்தை ஃபேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் இணைந்து தயாரித்துள்ளனர்.

Advertisment

இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (14.09.2021) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன், "தயாரிப்பாளர்தான் இந்தப் படம் இவ்வளவு பெரிதாக வரக் காரணம். விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா மேடம் என இப்படத்தில் என்னை நம்பி நடித்த அனைவருக்கும் நன்றி. இப்படம் ஹாரர் இல்லை. இது ஒரு ஃபேண்டஸி காமெடி படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். உங்களது ஆதரவை தாருங்கள். அப்பாவிடம் மனித பண்புகளைத்தான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். இயக்கத்தை ஏ.எல். விஜய்யிடம்தான் கற்றேன். தொடர்ந்து காமெடி படங்கள் இயக்க ஆசை இல்லை, வித்தியாசமான களங்களில் படங்கள் எடுப்பேன். நடிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை, தொடர்ந்து படங்கள் இயக்குவதில்தான் கவனம் செலுத்தவுள்ளேன் என்றார்.

Advertisment

இந்நிகழ்வில் நடிகர் சுந்தர்ராஜன் பேசுகையில், "நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டன. எனது ஆரம்பகால படங்களுக்கு விமர்சனம் தந்த பத்திரிகையாளர்கள் இங்கு உள்ளனர். எனது திரைப்பயணத்திற்கு ஆதரவும், பாராட்டும் தந்த பத்திரிகையாளர்கள் என் மகனுக்கும் அதே ஆதரவை தந்து வளர்த்துவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனக்குப் படத்தின் கதை தெரியாது. படம் பற்றி எதுவும் தெரியாது. அவனே வளர்ந்து வரட்டும் என்று எதிலும் தலையிடவில்லை. தயாரிப்பாளர் முழுப்படத்தையும் பார்த்துவிட்டு நன்றாக வந்திருப்பதாக ஃபோன் செய்து சொன்னார். சந்தோஷமாக இருந்தது. இங்கு வந்து பாடல்கள் டிரெய்லர் பார்த்தபோது அவனிடம் முதல் பட தயக்கம் எதுவும் இல்லாமல், தெளிவாக செய்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என் மகனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்" எனக் கூறினார்.