/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_168.jpg)
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அடுத்த வருடத் தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. பின்பு மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.
சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நள்ளிரவில் வெளியான இந்த மிரட்டலான கிளிம்ப்ஸ் வீடியோ இதுவரை யூட்டியூபில் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரண்டிங்கில் உள்ளது.
இந்த நிலையில் படத்தின் இயக்குநர், ‘கங்குவா’ குறித்து பேசியதாவது, “இது ஒரு பீரியட் படமாக நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இப்படத்தில் சமகாலம் மற்றும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை என இரு வேறு விஷயங்களை உள்ளடக்கி படமாக்கி இருக்கிறோம். நான்கு வருடங்களுக்கு முன்பே நான் இந்த கதையைத்தயார் செய்து விட்டேன். அப்போதிலிருந்து இக்கதையை படமாக்கும் திட்டத்தில் இருக்கும் பொழுது சூர்யா சாருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் பிடித்திருந்ததால் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக பத்து மொழிகளில் தயாராக்கி வருகிறோம்”.
“கங்குவா என்றால் கங்கு என்பதற்கு நெருப்பு என்று பொருள் எனவே நெருப்பின் மகன் என்ற பெயருக்காக இப்படத்திற்கு கங்குவா என பெயர் வைத்துள்ளோம். இந்தப் படத்திற்காக சூர்யா மிக கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார். மிகவும் மெனக்கெட்டு பல விஷயங்களை இப்படத்திற்காக செய்திருக்கிறார். படம் பிரம்மாண்டமாகவும், தரமாகவும் தயாராகி வருகிறது. படத்தை டெக்னிக்கலாக தரமாக கொடுப்பதற்கு நாங்கள் முழுமூச்சில் தயாராகி வருகிறோம். கங்குவா படம் அடுத்த ஆண்டு முதல் மாதத்தில் வெளிவர திட்டமிட்டு வருகிறோம்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)