
பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன கலைஞராக இருந்தவர் சரோஜ் கான். கடந்த சனிக்கிழமை அன்று மும்பை குருநானக் மருத்துவமனையில் சுவாசக் கோளாறு பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். அவருடைய மறைவிற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் நடன வடிவமைப்பாளராக, விஜய் நடித்த ‘வசீகரா’ படத்தில் பணிபுரிந்தார். அந்த படத்தின் இயக்குனர் செல்வபாரதி, மறைந்த நடனக் கலைஞர் சரோஜ் கான் குறித்த நினைவுகளை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
தமிழில் சரோஜ் கான் மாஸ்டருடன் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்து?
சரோஜ் கான் மாஸ்டர் தமிழில் பணிபுரிந்த படங்களில் முக்கியமான படம், அற்புதமான படம் என்று சொன்னால் வசீகராவை சொல்லலாம். நான் வசீகரா படத்திற்கு கமிட்டானபோது வேறொரு நடன வடிவமைப்பாளரை படத்தில் பயன்படுத்தலாம் என்று பேச்சுவந்தது. நான் விஜய்யிடம், நாம் ஏன் சரோஜ் கான் மேமை பயன்படுத்தக் கூடாது என்று கேட்டேன். சரோஜ் கான் மேம், தமிழில் அப்போது படங்கள் பண்ணவில்லை என்றாலும், ஹிந்தியில் அவர் கோரியோகிராஃப் செய்த படங்கள் அனைத்தும் விரும்பி பார்த்திருக்கிறேன் என்பதால் விஜய்யிடம் அவரை சொன்னேன். விஜய் என்னிடம், அவர் பெரிய மாஸ்டர் அண்ணே நம்பளை சுளுக்கு எடுத்து விட்றுவாங்க என்று சொன்னார். நான் உடனடியாக, இல்லை தம்பி உங்களிடம் ஒரு சிறு மாறுதல் கிடைக்கும், கடைசியாக ஒரு ஐந்து ஆறு படங்களை எடுத்து பார்த்தால், உங்களுடைய டான்ஸ் பேட்டர்ன் தெரிந்துவிடும் என்று சொன்னேன். அவரும் சுப்பர் ஐடியா அண்ணே, மாஸ்டரிடம் பேசுங்கள் என்றார்.
நான் அவரை தொடர்புகொண்டபோது தமிழ் படம் என்றபோது முதலில் அவருக்கு இண்ட்ரெஸ்ட் இல்லை, விஜய்தான் ஹீரோ என்றவுடன் அவருக்கு இண்ட்ரெஸ்ட் வந்துவிட்டது. அவரும் அருமையாக டான்ஸ் ஆடுவார். சோ, எனக்கு நல்ல சேலஞ்சாக இருக்கும் தமிழில் கண்டிப்பாக வந்து பண்ணுகிறேன் என்று தெரிவித்தார். அவருடைய டேட்டை வைத்து பாடல்களை ஷூட் பண்ணினோம். ஒவ்வொரு பாடல்களுக்கும் நான்கு நாட்கள் என்று தேதிகள் வாங்கி ஷூட் செய்தோம். சொல்வாயா, ப்ரிய சகி என்கிற இரண்டு பாடல்களையும் மூன்று நாட்கள் என்ற வீதத்தில் சுலபமாக முடித்து கொடுத்துவிட்டார். அவர் செட்டிற்கு வந்துவிட்டால் அவர் தன்னுடைய வேலையை பார்க்க தொடங்கிவிடுவார், நமக்கு எந்த சிரமத்தையும் தர மாட்டார். தமிழில் அவரை வைத்து நான் இரண்டு பாடல்களை எடுத்தது மிகவும் பெருமை படுகிறேன். இந்தமாதிரி சூழ்நிலையில் அவரை குறித்து பேசுவது என்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது, அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன். பாடல்கள் முடிந்து எடிட் செய்துபார்த்தபோது விஜய் சார் மிகவும் சந்தோஷப்பட்டார். இந்த மூவ்மெண்டுகள் எல்லாம் நானா போட்டது, என்னுடைய கேரியரில் நல்ல மாறுதல்கள் உள்ள நடனம் என்று தெரிவித்தார். நடனம் அதை தவிர வேற எதுவுமே தெரியாது.
விஜய்யின் நடனம் குறித்து அனைவருக்குமே தெரியும், அவர் முதலில் சரோஜ் கான் மேம் குறித்து சொன்னபோது என்ன நினைத்தார்?
அண்ணே பெரிய மாஸ்டர், அவங்க எதும் சொல்லி பண்ண முடியாட்டி ரொம்ப தப்பா போய்விடும். ‘தம்பி நீங்க போய் டான்ஸ்க்கு...’ என்று கூறினேன். அதற்கு விஜய், நம்ம இடத்தில் கெத்து காண்பித்துகொள்ளலாம். ஆனால், அவர் அங்கிருந்து வரும்போது திணரும் என்று சொன்னார். மாஸ்டரையே ஆச்சரியப்படுத்திவிட்டார் விஜய் தம்பி. ஒருமுறை அவர் ஆடுவதை மானிட்டரில் பார்த்துவிட்டார் என்றால் போதும், அதை அப்படியே எந்த பிசகும் இல்லாமல் ஆடிவிடுவார். விஜய் தம்பியும் நல்ல இன்வால்வ் ஆகிவிட்டார். படத்திலும் பாம்பே டான்ஸர்தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தம்பி அவர்கள் அனைவருக்கும் ஈடுகொடுத்து ஆடினார்.
அந்த இரண்டு பாடல்கள் எடுக்கும்போது சரோஜ் கான் மாஸ்டர் கருத்து என்ன தெரிவித்தார்?
விஜய் சார் நல்ல டான்ஸர் என்று தெரியும். அதேபோல நல்ல மனிதராகவும் இருக்கிறார். சில ஹீரோக்கள் நடனத்தில் சில மாறுதல்கள் சொல்வார்கள். ஆனால், தம்பி ஒரு மாறுதல்கள் கூட சொல்லவில்லை. அதுவே அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. சரோஜ் கான் மாஸ்டர் சினிமாவிற்காகவே வாழ்ந்தவர். கண்டிப்பாக சினிமாவிற்கு அவருடைய இழப்பு மிகவும் பெரிதாக இருக்கும்.