Skip to main content

கல்வி நிலையங்களை மதங்கள் ஜாதிகளின் பெயரால் உருவாக்கியது சரியா? இயக்குனர் சீனு ராமசாமி கேள்வி 

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

director seenu ramasamy tweet about hijab issuse

 

கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி துண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன் காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன.

 

இதன் தொடர்ச்சியாக கல்லூரிகளில் காவி துண்டை அணிந்து ஹிஜாப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பும், ஹிஜாப்பிற்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு தரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் இரண்டு தரப்பினரும் மோதிக் கொண்டனர். காவல்துறையினர் சில இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்தச்சூழலில் கல்லூரி ஒன்றில் காவி துண்டு அணிந்தவர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிட, மற்றொரு தரப்பு ‘ஜெய் பீம்’ என முழக்கமிடும் காணொளி வெளியானது. 

 

அதன்தொடர்ச்சியாக ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை சூழ்ந்து காவி துண்டு அணிந்தவர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட, பதிலுக்கு அந்த மாணவி ‘அல்லாஹு அக்பர்’  என கோஷமிடுவது, சிவமொக்காவில் கல்லூரி ஒன்றில் தேசிய கொடி ஏற்றப்பட வேண்டிய இடத்தில் காவி கொடி ஏற்றப்பட்டது. ஹிஜாப் அணிந்த மாணவிகளை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றுவது என பல்வேறு வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் சீனு ராமசாமி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா மதச்சார்பற்ற நாடா? அல்லது மதசகிப்பு தன்மை கொண்ட நாடா? இந்திய அரசியல் சாசனம் என்ன சொல்கிறது? முதலில் கல்வி நிறுவனங்கள் யாவும் மதங்கள் ஜாதிகளின் பெயரால் உருவாக்கியது சரியா? காலை பள்ளி அசெம்பிளியில் தேசிய கீதம் & தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் ஒலிக்குமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து, "உனது உடை, உனது மொழி, உனது கடவுள், உனது உரிமை, உனது இந்தியா, நம் தாய்நாடு ஜெய் ஹிந்து" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தேரு போல அசஞ்சு வந்தவளே...’ - குத்தாட்டம் போடும் ஜி.வி. பிரகாஷ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Idimuzhakkam first single released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் என ஏகப்பட்ட படங்களில் பணியாற்றுகிறார். 

இதில் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் உருவாகி வருகிறது. கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தில் காயத்ரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் கடந்த மாதம் நடந்த பூனே சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலாக  ‘அடி தேனி சந்தையில்...’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இப்பாடலைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வரதன் எழுதியுள்ள இப்பாடலை அந்தோனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். திருவிழாவில் நடக்கும் குத்து பாடலாக இப்பாடல் அமைந்துள்ள நிலையில், பாடலுக்கேற்ற குத்தாட்டம் போட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

Next Story

“பெண்கள் ஹிஜாப் அணிந்தால் எப்படி சுவாசிக்க முடியும்?” - பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
jaipur BJP MLA says How can women breathe if they wear hijab?

கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது, உடுப்பி மாவட்டத்தின் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் காவி துண்டை அணிந்துகொண்டு வந்தனர். இதனால், தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்று, தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது. 

இதனையடுத்து ஹிஜாப் தடையை திரும்ப பெற கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார். உடை, சாதி அடிப்படையில் மக்களை பிரிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த பாஜக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், ஜெய்ப்பூரில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அது தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் சமீபத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவினை சிறப்பிப்பதற்காக சிறப்பு விருந்தினராக பா.ஜ.க எம்.எல்.ஏ பாலமுகுந்த் ஆச்சார்யா அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, பாலமுகுந்த் ஆச்சார்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக அப்பள்ளிக்கு சென்றார். 

அப்போது அவர், அங்கு ஹிஜாப் உடை அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளிடம், “ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. ஹிஜாப் அணிந்திருந்தால் எப்படி சுவாசிக்க முடியும்” என்று ஆட்சேபனைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியதோடு ஹிஜாப்பை கழற்றுமாறு கூறியுள்ளார். இதை, இஸ்லாமிய மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க எம்.எல்.ஏ பாலமுகுந்த் ஆச்சார்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.