
இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் ராஜ்ஜியம் உலகம் முழுவதும் கொடிகட்டிப் பறந்துவருகிறது. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல ஸ்ட்ரீமிங் தளங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ஓ.டி.டி. வருகையால் திரையரங்குகள் அழிவைச் சந்திக்கலாம் என்ற கருத்தும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், திரையரங்குகள் மற்றும் சினிமா துறையின் மீது ஓ.டி.டி யின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறியது...
ஓ.டி.டி வருகையால் திரையரங்குகள் பாதிக்கப்படுமா என்று கேட்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை ஓ.டி.டி வரவால் திரையரங்குகள் வளர்ச்சிதான் பெறும், பாதிப்படையாது. எப்படி தொலைக்காட்சி வரும்போது சினிமா அழியும், அழியும் என்று சொன்னார்கள். ஆனால் அதில் செய்யப்பட்ட விளம்பரங்களால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது அதிகரித்தது. அதேபோலத்தான் இப்போதும் திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்கள். திரையரங்குகள் எப்போதும் மாற்றமடையாது. சினிமாவில் எத்தனையோ தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோல கதைசொல்லும் முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் இதிகாசங்கள், புராணங்கள் வைத்து படங்கள், பின்னர் வசன சினிமா அதன்பின் காட்சிபூர்வமான சினிமா, இப்படி மௌன படத்தில் தொடக்கி இன்று கதை சொல்லும் விதங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
எது மாறினாலும் மனிதனுக்கும் திரைக்குமான உறவு இன்னும் மாறவில்லை. காரணம், மனிதனின் அடிப்படை உணர்ச்சியே ஒன்றுகூடுதல் தான். கொண்டாட்டத்திற்கும், தூக்கத்திற்கும், போராட்டத்திற்கும் ஒன்று கூடுவதும் எனும் மனிதனின் அடிப்படை உணர்ச்சியே இதற்கான அடிப்படை காரணம். ஒன்றுகூடும் உணர்வின் வெளிப்பாடு, திரையரங்கம் கொடுத்த அனுபவம் ஆகியவை திரையரங்கை வாழவைக்கும். இதுதான் திரையரங்கின் உயிர்மூச்சு. ஒன்றுகூடுதல் உணர்வு மனிதர்களுக்கு இருக்கும் வரைக்கும், திருமணத்திற்கும், துக்க நிகழ்ச்சிக்கு ஒன்றுகூடும் மக்கள் இருக்கும் வரைக்கும் திரையரங்குகள் வாழும்.
அப்படியென்றால் ஓ.டி.டி என ஆகும்..? திரையரங்கம் சென்றுசேர முடியாத படங்கள் ஓ.டி.டி யில் வந்துசேரும். எல்லாவிதமான படங்களுக்கும், படைப்பாளிகளுக்கும் தன்னம்பிக்கை தரக்கூடிய இடமாக ஓ.டி.டி இருக்கும். இதனால், திரையரங்கங்கள் வீழ்ச்சி அடையாது. திரையரங்குகள் அழிந்துபோகாது. மனிதனின் ஒன்றுகூடுதல் உணர்வின் வெளிப்பாடுதான் திரையரங்கம். மக்கள் திரையரங்குகளை மிஸ் செய்ய மாட்டார்கள். திரையரங்கம் வந்துசேர முடியாத படங்கள் ஓ.டி.டியில் கவனம்பெறும், உலகப்புகழ்பெறும்.