director saravanan shared a true incident about sivakarthikeyan

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலே அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள சிவகார்த்திகேயன் இன்று (17.02.2023) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் 'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' உள்ளிட்ட படங்களை இயக்கிய இரா.சரவணன் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு ஒரு உண்மை சம்பவத்தையும் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவரது ஃபேஸ்புக் பதிவில், "சினிமா சம்பந்தப்பட்ட ஓர் ஆளுமைக்கு திடீர் நெஞ்சு வலி. அப்போலோவில் அட்மிட். அறுவை சிகிச்சைக்குப் பணம் தேவை. அவர் பணியாற்றும் நிறுவனத்தினர் ஒருபுறம் போராட, நண்பர்கள் நாங்களும் திண்டாடினோம். அ.வினோத் ஒரு லட்சம் கொடுத்தார். மற்றவர்களும் கொடுத்தார்கள். ஆனாலும், திரட்டிய தொகை போதவில்லை. 'சார், நடிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்டுப் பார்க்குறீங்களா?' என என்னிடம் ஒருவர் சொல்ல, நான் சட்டென மறுத்துவிட்டேன்.

Advertisment

காரணம், நான் சிவாவிடம் நிறைய கேட்டுவிட்டேன். அவரும் மறுக்காமல் செய்துகொண்டே இருக்கிறார். முடியாது என அவர் சொன்னதே இல்லை. அதற்காக எல்லாவற்றுக்கும் அவரிடம் போய் நிற்பது எனக்கு நியாயமாகப்படவில்லை. இரண்டு நாட்கள் கழித்தும் போதிய தொகையைத் திரட்ட முடியாத நிலையில், வேறு வழியே இல்லை. விஷயத்தைத் தம்பி சிவகார்த்திகேயனிடம் மொத்தமாகக் கொட்டித் தீர்த்தபோது, 'நான் பார்த்துக்குறேன். தொகை முழுவதையும் நான் கட்டுறேன். என் பங்களிப்பை அவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். எல்லோரும் சேர்ந்து அவருக்காக நிற்பதாகவே இருக்கட்டும்...' என்றார் சிவா.

சட்டென ஒரே ஒரு போனில் மொத்த பாரத்தையும் கைமாற்றிக்கொண்ட தம்பி சிவாவின் அன்பு கோடி பெறும். “திரட்டிய தொகை கையில் இருக்கிறது. தேவைப்படும் தொகையை மட்டும் மருத்துவமனைக்குக் கொடுத்தால் போதும் தம்பி...” என வற்புறுத்திச் சொன்னேன். 'அவர் ரொம்ப முக்கியமான ஆள். பேசுறப்ப அவ்வளவு எனர்ஜி கொடுக்கிற மனிதர். ஹாஸ்பிடலில் பேசி அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் செஞ்சு கொடுங்க...' என தம்பி நவநீதனை பணித்து, சிவா காட்டிய அக்கறை அந்த உதவியைவிட மேலானது. சிகிச்சையில் இருக்கும் அந்த ஆளுமையிடம் சிவாவின் வார்த்தைகளை அப்படியே சொன்னேன். குலுங்கி அழத் தொடங்கிவிட்டார். 'என்னை இந்தளவுக்கு நினைவு வைச்சிருக்காரே...' என நெகிழ்ந்து போனார். சிவகார்த்திகேயன் போன்றவர்கள் உற்ற துணையாக நிற்பதுதான் அவருக்குப் பெரிய ஆறுதல். எதையும் பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல் எல்லாமும் செய்யும் அன்புத்தம்பி சிவகார்த்திகேயனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.