Advertisment

“இந்தச் சாத்தான்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்”- இயக்குனர் எஸ்.ஏ.சி!

sac

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்ததாகக்கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisment

கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும், அரசின் விதிமுறைகளின்படி, குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது இந்தச் சம்பவத்திற்குப் பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் தலைமைக் காவலர் ரேவதி துணிச்சலாக சாட்சி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. வழக்கில் சம்மந்தப்பட்டவர்களைக் கைது செய்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தக் கரோனா ஒரு பயங்கரமான கொடிய வைரஸ் என்கிறார்கள். அதில் மாட்டிக் கொண்டவர்கள் கூட பலர் உயிருடன் திரும்பி வந்துவிடுகிறார்கள். ஆனால், இந்தச் சாத்தான்குளம் சம்பவத்தைக் கேள்விப்படும் போது, இப்படிப்பட்ட காவல்துறையினரிடம் மாட்டினால் என்னாவது என்று நினைக்கும்போதே ஈரக்குலை நடுங்குகிறது.

இந்தக் கரோனா காலத்தில் எத்தனை காவல்துறையினர் கடவுளின் பிரதிநிதிகளாக வேலை செய்தார்கள். அதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் கூடாது. அப்படிப்பட்ட காவல்துறையில் இப்படிப்பட்ட கொடுமையா? இந்தச் சாத்தான்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதுவும் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும். இவர்களைக் காப்பாற்ற நினைக்கிற யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe