
சூர்யா ஃபிலிம்ஸ் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் பியோஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிட்தி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், "தமிழ் சினிமாவில் விஜயகாந்த் மாதிரி சாப்பாடு போட்ட நடிகர் உலகத்தில் யாருமே கிடையாது. சின்ன கவுண்டர் படத்திற்கு முன்பாக ஊமை விழிகள் படத்திலிருந்தே விஜயகாந்த்துடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. உழவன் மகன் படப்பிடிப்பு சமயத்தில் கோனார் மெஸ்ஸுக்கு கையோடு என்னை தூக்கிக்கொண்டு போவார் விஜயகாந்த். 'இந்த எலும்ப நல்லா சாப்பிடு, ஆள் ரொம்ப ஒல்லியா இருக்க, இதை சாப்பிடு அதை சாப்பிடு' என்று எனக்கு ஊட்டிவிடுவார். யார் பசியோடு வந்தாலும் அவர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக பின்புறம் டைனிங் டேபிளை கட்டிவைத்த ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டும்தான்.
கொரோனா காலத்தில் சங்க உறுப்பினர்களுக்கு கேட்டவுடன் உதவி செய்த ரஜினி சாரை மறக்கக்கூடாது, கேட்காமலே உதவி செய்த அஜித் சாரையும் மறக்கக்கூடாது. தன்னுடைய படம் தோல்வியடைகிறது என்றால் உடனே அந்தத் தயாரிப்பாளருக்கு மீண்டும் படம் கொடுக்கக்கூடியவர் அஜித். அப்படி கொடுத்து கொடுத்து முடியாமல் ஒருகட்டத்தில் விட்டுவிட்டார். இன்றைக்கு உள்ள ஹீரோக்கள் சம்பளம் வாங்கிய உடனேயே முதலீடு செய்துவிடுகிறார்கள். அதனால்தான் படம் தோல்வியடைந்தால் அவர்களால் தயாரிப்பாளருக்கு உதவ முடிவதில்லை.
சிவாஜி சார் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது 'அவரிடம் சென்று ஏதாவது பேசுடா' என்று பிரபு என்னிடம் சொன்னார். 'முடிந்தால் ஏதாவது கதை சொல்லு' என்றார். நான் அவர் படுக்கையறைக்கு சென்று அவருக்கு கால் அழுத்திவிட்டேன். 'அப்பா உங்களுக்கு எல்லாம் சரியாகிரும், நான் உங்களுக்கு ஒரு கதை பண்ணிருக்கேன் கேட்குறீங்களா' என்றேன். 'சரி சொல்லு' என்றார். அதற்கு முந்தைய நாள் ஒரு ஆங்கில படம் பார்த்திருந்தேன். அந்தக் கதையை கொஞ்சம் மாற்றி அவரிடம் கூறினேன். அந்தக் கதை அவருக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
பின், 'என்னை கொஞ்சம் எழுந்து உட்கார வைடா' என்றார். நான் அவரை கட்டிலில் உட்காரவைத்தேன். 'இப்பலாம் எல்லோரும் இயற்கையான நடிப்பு, எதார்த்த நடிப்பு என்கிறார்கள். நான் ரொம்ப நடிச்சிட்டேன்டா. அந்த மாதிரி நான் நடிக்கட்டுமா' என்றார். தான் தொட முடியாத எல்லை இருக்கிறது என்பதை கடைசிவரை ஒரு கலைஞன் நம்பினான் என்றால் அது சிவாஜிதான். வளரவளர வெற்றிகள் கொடுக்க கொடுக்க பணிவும் அடக்கமும் நமக்குத் தேவை. அந்தக் குணத்தை சிவாஜி சாரிடம் கண்டு வியந்துவிட்டேன்.
எம்.ஜி.ஆர். எவ்வளவு பேருக்கு உதவி செய்கிறார், அதைவிட நான் அதிகமாக என்ன செய்ய முடியும் என்று நினைத்த நடிகர்கள் இருந்த துறை இந்த சினிமாத்துறை. ஆனால், இன்றைக்கு உள்ள நடிகர்கள் அவருக்கு ஈ.சி.ஆரில் பங்களா உள்ளது, எனக்கும் அங்கு ஒரு பங்களா இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்" எனப் பேசினார்.