Skip to main content

"விஜய் நம்பிக்கை கொடுத்தார்; அஜித் அழைப்பார் என்று நம்புகிறேன்" - மனம் திறக்கும் 'ஐங்கரன்' இயக்குநர் 

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

 Director Ravi Arasu

 

ரவியரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஐங்கரன் திரைப்படம், கடந்த 12ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வணிக ரீதியிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ரவியரசுவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் ஐங்கரன் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

இந்த வெற்றிக்காகத்தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன். இதற்கிடையே நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஐங்கரன் ரிலீஸ் ஆகவும் பார்த்துக்கொள்ளலாம் என்று எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. இன்னும் ஒரு மாதத்திற்குள் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடவுள்ளேன். 

 

எனக்கு மோட்டிவேஷன் ரொம்பவும் பிடிக்கும். எப்பவுமே மற்றவர்களை மோட்டிவேட் பண்ணிக்கொண்டே இருப்பேன். அதனால்தான் முதல் படத்தில் ஸ்போர்ட்ஸ், இரண்டாவது படத்தில் கண்டுபிடிப்பு என மோட்டிவேஷனுக்கு தொடர்புடைய கதைக்களத்தையே தேர்ந்தெடுத்தேன். நான் அஜித் சாரோட தீவிர ரசிகர். அவரிடமிருந்து எனக்கு அழைப்புவரும் என்று நம்புகிறேன். அப்படி வந்தால் நிச்சயம் அவருக்கு கதை சொல்லுவேன். ஏற்கனவே விஜய் சாருக்கு ஒரு கதை சொன்னேன். அவருக்கு அந்தக் கதை ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனால், அந்தக் கதையில் அவரால் நடிக்கமுடியவில்லை. அதேநேரத்தில், இந்தக் கதை கண்டிப்பாக ஜெய்க்கும். வேறு ஹீரோ யாரையாவது வச்சு பண்ணுங்க என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார். 

 

இளம் விஞ்ஞானி ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது சில தகவல்கள் கிடைத்தன. அதை வைத்து படம் எடுத்தால் என்ன என்று யோசித்து ஐங்கரன் படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்தேன். கதை எழுதுவதற்கே ஒருவருடம் வரை காலமெடுத்தது. படத்திற்கு நிறைய பாசிட்டிவ் ரிவ்யூஸ் வந்ததற்கு அதுதான் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். அந்த இளம் விஞ்ஞானி, டூவிலர் டயருக்குள் அலுமினியம் பயன்படுத்தி ஒரு வகையான டயரை வடிவமைத்திருந்தார். அந்த டயர் பஞ்சரே ஆகாது. அதை அவர் பேட்டன் ரைட்ஸுக்காக சமர்ப்பித்தபோது நிராகரித்துவிட்டனர். அதற்கு பின்னால் டயர் நிறுவனங்களின் வணிக அரசியல் இருந்தது. இது மாதிரியான விஷயங்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம்.

 

முதல்நாள் ஷூட்டிங் முடிந்த உடனேயே இந்தக் கதைக்கு ஜி.வி. பிரகாஷ் ரொம்பவும் பொறுத்தமாக இருப்பார் என்ற நம்பிக்கை வந்தது. முடியாது முடியாதுனு வட்டவட்டமா நின்னு பேசிக்கிட்டு இருக்கீங்க, அதுக்கு முடியும்கிறவங்களுக்கு வாய்ப்பு கொடுத்துட்டு போகவேண்டியதுதானா, ஜெய்க்கிறவரை வீண் முயற்சினு சொல்லுவாங்க, ஜெய்ச்சுட்டா விடா முயற்சினு சொல்லுவாங்க டயலாக்ஸ்க்கு நல்ல கைத்தட்டல் கிடைத்தது. எழுதும்போதே இது பெரிய அளவில் வொர்க்கவுட்டாகும் என்ற நம்பிக்கை இருந்தது. 

 

இளம் விஞ்ஞானி ஒருவர் இருக்கிறார் என்றால் உதவிகள் செய்து அவரை என்கரேஜ் பண்ணவேண்டும். பேட்டன் ரைட்ஸில் உள்ள சில விஷயங்களையும் சரி செய்தால் நம் ஊரில் நிச்சயம் நிறைய இளம் விஞ்ஞானிகள் உருவாகுவார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்