
‘அமைதிப்படை 2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த வி ஹவுஸ் நிறுவனம், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் 'மாநாடு' படத்தைப் பிரம்மாண்டமாக தயாரித்துவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிற நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அடுத்ததாக தான் தயாரிக்கும் படத்தின் அறிவிப்பை இன்று (03.08.2021) வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி, இந்தப் புதிய படத்தை 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராம் இயக்குகிறார். 'பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட நடிகர் நிவின்பாலி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, நகைச்சுவை நடிகர் சூரி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதுகுறித்து சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவில், "தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு முகங்களுடன் ஒரு சிறந்த பயணத்தின் தொடக்கம்" என கூறியுள்ளார்.
Follow Us