‘நீ வருவாய் என’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’, ‘காதலுடன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜகுமாரன். பின்பு ‘திருமதி தமிழ்’ என்ற படத்தில் இயக்கியதோடு நடித்தும் இருந்தார். இதனிடையே அவர் படங்களில் நடித்த நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம் நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். இதையடுத்து விஜய் மில்டன் இயக்கிய ‘கடுகு’ படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் ராஜகுமாரன், ‘இமயா நேச்சுரல்ஸ்’ என்ற பெயரில் வியாபாரத் துறையில் இறங்கியுள்ளார். சென்னையில் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவின் வளாகத்தில் ஸ்டால் போட்டு தனது அழகு சாதன பொருட்களை ஸ்டால் போட்டு விற்பனை செய்துள்ளார்.
இந்த பொருட்கள் நூறு சதவீதம் இயற்கை முறையில் தனது தோட்டத்தில் விளையும் பொருட்களை வைத்து உருவாக்கப்பட்டதென கூறுகிறார். மேலும் இதுவரை நாங்கள் பெற்றுக்கொண்டிருந்த இயற்கை பொருட்களை என்னை சார்ந்த அனைவரிடத்திலும் கிடைக்க வேண்டும் என ஒரு சின்ன முயற்சி எடுத்துள்ளதாக கூறும் அவர், இதையும் ஒரு தொழிலாகவே செய்து வருவதாக சொல்கிறார். அதோடு 40 வருடத் திரைத்துறையில் இதுவரை வருடத்திற்கு ஒரு லட்சம் என 40 லட்சம் கூட சம்பாதித்தது இல்லை என சொல்கிறார்.