/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/parkni.jpg)
அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில், தமன், ஸ்வேதா டோரத்தி, விஜித் சரவணன், பிளாக் பாண்டி, ரஞ்சனி நாச்சியார், சித்தா தர்ஷன், ஜெயந்திமாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “இப்போது இயக்குனர்கள் எல்லாமே நடிகர்கள் ஆகிவிட்டார்கள்.இங்கே வந்திருக்கும் ஆர்.வி. உதயகுமார், சிங்கம் புலி, சரவண சுப்பையா எல்லாரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பாடல் எழுதியிருப்பவர் பெயர் ராசாவாம். அவர் எழுதிய பாடலைப் பார்க்கும்போது இனி அவர் மன்மத ராசா. அந்த அளவிற்கு எழுதி இருக்கிறார். இயக்குநர், தயாரிப்பாளரிடம் கதை சொன்னதைப் பற்றிப் பேசினார். நாங்கள் எல்லாம் இரண்டு மணி நேரம் மூச்சு முட்டக் கதை சொல்வோம். இவர் இரண்டே வரியில் கதை சொல்லி தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைத்திருக்கிறார். இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன். கொழு கொழுவென்று இருக்கிறார்.
அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள். பிறகெல்லாம் சிம்ரன், திரிஷா என்று இளைத்தவர்களாக இருப்பார்கள். கொழு கொழுவென இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும். இந்த கதாநாயகி ஸ்வேதா அப்படி இருக்கிறார். சினிமாவில் இயக்குநருக்குக் கதைப்பிடிப்பும் கதாநாயகிக்குச் சதைப்பிடிப்பும் தேவை. இந்த இரண்டாவது கதாநாயகி கன்னடத்து பைங்கிளி தமிழைக் கொஞ்சி கொஞ்சிப் பேசினார். கேட்பதற்கு அழகாக இருந்தது. நாங்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. சரோஜா தேவியை எல்லாம் கன்னடத்துப் பைங்கிளி என்று கொண்டாடினோம் . உங்களையும் வரவேற்போம்” என்றார்
இதனையடுத்து இயக்குநர் சிங்கம் புலி பேசும்போது, “தமன் நன்றாக இருக்கிறார், நன்றாக நடிக்கிறார். அவருக்கு என்ன குறைச்சல்? இவ்வளவு நாள் தனக்காக அவர் காலத்தைச் செலவிட்டு உள்ளார். இனி அதற்குப் பலன் உண்டு. சினிமா அவரைக் கைவிடாது. ஏனென்றால் அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமா இரண்டு பேருக்கு வாய்ப்பு கொடுக்கும். தலை சீவ முடியாத அளவிற்கு அடர்த்தியான முடி கொண்டவர்களுக்கும், தலையில் முடியே இல்லாது தலை சீவ வழியில்லாதவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும். எனக்குப் பாட்டு பாடப் பிடிக்கும். ஆனால், டப்பிங் நடக்கும் போது நான் இடைவேளையில் பாடினால் விடவே மாட்டார்கள்” என்று பேசியவர், சங்கீத ஜாதி முல்லை பாடலைப் பாடி அந்த விழாவுக்கு கலகலப்பூட்டினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)