விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’. இப்படத்தை ஸ்டண்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். இப்படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜலட்சுமி அனல் அரசு தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 4ஆம் தேதி வெளியாகவுள்ளது

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் விஜய் சேதுபதி, இயக்குநர்கள் வினோத், பாண்டிராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டு பேசினர். அப்போது மேடையில் பாண்டிராஜ் பேசுகையில், “சூர்யாவுக்காக மட்டுமே இங்கு வந்திருக்கேன். அனல் அரசுடன் ஒரே ஒரு படம் மட்டும் தான் ஒர்க் பண்ணி இருக்கேன். அதிலும் ஒரே ஒரு பைட் சீன் தான். இருந்தாலும் அவர் தெளிவான மாஸ்டர். 

படத்தின் டிரைலர் பார்க்கும்போது படம் அற்புதமாக வந்துள்ளது என்பது தெரிகிறது. பசங்க படத்தில் கமிட் ஆகும்போது விஜய் சேதுபதியை தெரியும். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமல் கேரக்டருக்கு நடிக்க விஜய் சேதுபதி வந்திருந்தார். அவரை பார்த்ததும், அவர் முகத்தில் அவ்ளோ ஒரு வெகுளித்தனம். சினிமாவில் ஜெயித்து விடுவோமா, தோற்றுவிடுவோமா போன்ற பல கேள்விகள். அவரது முகத்தை பார்த்து எப்படி இல்லை என சொல்வதென்று யோசித்தேன். அப்புறம் சொன்ன பிறகு, சின்ன கேரக்டர் இருந்தாலும் கொடுங்க நடிக்கிறேன்னு சொன்னார். அப்படி, எதாவது பண்ணி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட முகம். ஆனால் சமீபத்தில் அந்த முகத்தை பார்க்கும் போது, வியப்பாக இருக்கிறது. அவரிடம் அவ்ளோ மனிதாபிமானம் இருக்கிறது. 

ஆனால் சூர்யாவை பார்க்கும் போது அவங்க அப்பாவிடம் இருந்த வெகுளித்தனம் இல்லை. பயங்கர தெளிவோடு இருந்தார். பல நாட்களாக சினிமாவை கரைத்து குடித்தது போல் தெளிவாக பேசினார்” என்றார் தொடர்ந்து பேசிய அவர், “விஜய் சேதுபதியை விட, அவரது மகன் சூர்யா சிறப்பாக நடனமாடியுள்ளார். சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக்கோழி படத்தில் விஷாலை பார்க்கும்போது என்ன தோன்றியதோ அதேபோல் தான் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது தோன்றியது. விஜய் சேதுபதியின் 10 படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தாலே சூர்யா நல்ல நடிகராக வந்துவிடலாம்.  ஒரு அண்ணனாக நானும் உங்களை வாழ்த்துகிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய. வாழ்த்துக்கள்” என்றார். பாண்டிராஜும் விஜய் சேதுபதியும் தற்போது தலைவன் தலைவி என்ற தலைப்பில் ஒரு படம் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment