Skip to main content

“நெஞ்சில் வலியுடன் காரில் ஏறினேன்...” - இயக்குனர் மிஷ்கினின் என்.வி.ஜி.பி. தியேட்டர் ஞாபகங்கள்

Published on 26/11/2020 | Edited on 27/11/2020
myskin

 

 

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மிஷ்கின், தனது தந்தையுடன் சிறு வயதில் சென்ற திரையரங்கிற்கு சென்று, அங்கிருக்கும் அவருடைய நினைவுகளை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு...

 

"இன்று மதியம் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி. தியேட்டருக்கு சென்றேன். பழைய ஞாபகங்கள் பெருவெள்ளமாய் என்னை அடித்தது. என்னுடைய ஐந்தாவது வயதில் என்னுடைய தந்தை என்னை இந்த தியேட்டருக்குள் அழைத்து சென்றார். படம் பார்த்து விட்டு வெளியே வந்தேன். “எப்படிப்பா இருக்கு?” என்று என் தந்தை கேட்க “ரொம்ப நல்லாருக்குப்பா” என்று சொன்னேன். என் தந்தை என் கையை பிடித்துக்கொண்டு மீண்டும் தியேட்டருக்குள் சென்று கியூவில் நின்று டிக்கெட் வாங்கி இரண்டாவது முறையாக என்னைப் படம் பார்க்கவைத்தார். அதுதான் என்னுடைய முதல் திரைப்படம். அது புரூஸ் லீ நடித்த ‘எண்டர் தி டிராகன்’ (Enter The Dragon).

 

சிறுவனாய் பல திரைப்படங்களை இந்த என்.வி.ஜி.பி. திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறேன். கால ஓட்டத்தில் பல ஊர்களுக்கு நகர்ந்து கடைசியாகச் சென்னை வந்து சேர்ந்து நகரவாசியாகிவிட்டேன். இரண்டு நாட்களுக்கு முன் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள இடங்களில் என் அடுத்த திரைப்படத்திற்காக லொக்கேஷன் ஸ்கவுட்டிங் (Location Scouting) செய்து ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். திடீரென்று மனதில் ஒரு உதயம். காரை எடுத்துக்கொண்டு என்.வி.ஜி.பி. தியேட்டருக்கு வந்தேன். வாசலுக்கு வந்து அண்ணாந்து பார்க்க. ஒரு பெரும் ஆலமரம் போல் அந்த தியேட்டர் நின்று கொண்டிருந்தது. காவல்காரர் “யாருய்யா நீங்க, என்ன வேணும்? என்று கேட்க. “நான் இந்த தியேட்டர் ஓனரைப் பார்க்கணும்.” என்றேன்.

 

nvgb theater

 

காவல்காரர் மாடிப்படி ஏறிச்சென்றார். ஆறடி உயரம் கொண்ட கம்பீரமான ஒரு மனிதர் படிக்கட்டில் இறங்கி வந்தார். என்னைப் பார்த்து “என்ன வேணும் உங்களுக்கு?” என்று கேட்டார். “நான் கொஞ்சம் தியேட்டரை பார்க்கலாமா?” என்று தாழ்மையுடன் கேட்டேன். “இங்க படம் ஏதும் ஓடலைய்யா” என்றார். "இது என் வாழ்க்கையே ஓடவைத்த தியேட்டர் அய்யா” என்றேன். ”நீங்க யாரு?” என்று அப்போது கேட்டார். “என் பேரு மிஷ்கின். நான் ஒரு திரைப்பட இயக்குநர்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். “என்ன படம்லாம் பண்ணிருக்கீங்க?” என்று கேட்டார். என் அருகில் நின்ற உதவி இயக்குநர் என்னுடைய எல்லா படங்களின் பெயரையும் பட்டியலிட்டான். “நான் எந்த படமும் பாக்கலையே.” என்று என் ஆணவத்தின் தலையில் கொட்டினார். நான் சிரித்து “ஆமாய்யா. அதெல்லாம் சாதாரணப் படங்கள்தான். Enter The Dragon மாதிரி ஒரு படம் இன்னும் பண்ணல” என்றேன். அவர் புன்னகை செய்து ”வாங்க தியேட்டர காட்டுறேன்.” என்று உள்ளே அழைத்துப் போனார்.

 

நான் உள்ளே ஐந்து வயது சிறுவனாக நுழைந்தேன். இருட்டில் ஆயிரத்துக்கு மேல் இருந்த நாற்காலிகளைத் தடவிப்பார்த்தேன். ஒரு நாற்காலியில் உட்கார்ந்து திரையை அண்ணாந்து பார்த்தேன். பெரும் சத்தங்களுடன் அமைதியாக ஒரு திரைப்படம் ஓடியது. புரூஸ் லீ காற்றில் பறந்து கெட்டவர்களைத் தாக்கினார். அந்த தியேட்டருக்குள் நான் சிறுவயதில் பார்த்த தூண்கள் அப்படியே இருந்தன. இரண்டு மூன்று போட்டோக்களை என் உதவி இயக்குநர் எடுத்தான். நான் மீண்டும் தியேட்டருக்குள்ளிருந்து வெளியே வர. எனது வயது அதிகமானது.

 

dindigul nvgb theater owner

 

“ஏன் தியேட்டருல்ல படம் ஓட்டல.” என்று ஓனரிடம் கேட்டேன்.” காலம் மாறிடிச்சுய்யா. டிவி வந்துருச்சி, நெட் வந்துருச்சி, பைரசி வந்துருச்சி, எல்லாம் வந்துருச்சி. தியேட்டர நம்பி முதலீடு போட முடியல. அதுனாலதான் தியேட்டர்ல படம் ஓட்டுறத நிப்பாட்டிட்டோம்ய்யா” என்றார். நான் மௌனமாக நின்றேன். “வாங்க ஒரு காபி சாப்பிடலாம்" என்று அந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அந்த காம்பவுண்டுக்குள்ளேயே இருந்த அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவரது மனைவியிடம் “நாலு காபி போட்டு குடும்மா.” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

 

என் நண்பர் ஸ்ரீகாந்தும், என் உதவி இயக்குநரும் அவரிடம் பேசிக்கொண்டிருக்க நான் மௌனமாக அமர்ந்திருந்தேன். காபி வந்தது. குடித்துவிட்டு வெளியே வந்தேன். நான்கு இளைஞர்கள் ஓடிவந்து ”சார், செல்பி எடுத்துக்கணும் சார்” என்றார்கள். தியேட்டரின் முதலாளி அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார். “ஓ இவரை உங்களுக்குத் தெரியுமா?” என்றார். அந்த இளைஞர்கள் “இவர் படமெல்லாம் எங்களுக்கு புடிக்கும் சார்” என்றார்கள்.

 

myskin

 

 

“நானும் என் மனைவியும் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா? என் குழந்தைகள் அமெரிக்காவில் இருக்காங்க. அவுங்களுக்கு அனுப்புவேன்” என்றார். “எடுத்துக்கோங்கய்யா” என்று நான் அவர்கள் இருவருக்கும் அருகே நிற்க, அவர்கள் போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.

 

“ரொம்ப நன்றிய்யா” என்று சொல்லி நான் காரில் ஏறப்போய் திடீரென்று நின்று, திரும்பி அவரைப் பார்த்து, ”படம் ஓட்டுறத நிப்பாட்டிட்டீங்க. இப்ப இந்த தியேட்டர என்னய்யா பண்ணப்போறீங்க?” என்று கேட்டேன். ”அடுத்தவாரம் இந்த தியேட்டர இடிக்கப் போறோம்யா” என்று சொன்னார். நெஞ்சில் வலியுடன் நான் காரில் ஏறி கதவை சாத்த, கார் கிளம்பியது. ஒரு இயக்குநராக அந்த தியேட்டரை கடந்து வந்துவிட்டேன். ஆனால் அந்த தியேட்டரின் வாசலில் அண்ணாந்து பார்த்தவாறு ஒரு ஐந்து வயது சிறுவன் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றான்."

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி; பர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Vijay Sethupathi directed by Mishkin; First look release

 

தமிழ் சினிமாவில் நாயகனாக ஆரம்பித்து இந்தி, தெலுங்கு சினிமாக்களில் வில்லனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாகத் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். மெரி கிறிஸ்துமஸ், விடுதலை இரண்டாம் பாகம் ஆகியவை ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

 

இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ‘டிரெயின்’ (Train) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த விஜய் சேதுபதி, தன்னுடைய வித்தியாசமான இயக்கத்தால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் மிஷ்கின். இவர்கள் இணைந்து ஒரு படம் உருவாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 

 

Next Story

மிரட்டும் லுக்கில் ஆண்ட்ரியா ; 'பிசாசு 2' டீசர் வெளியீடு

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

Andrea in an intimidating look; 'Pisasu 2' Teaser Released

 

தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மிஷ்கின் . இவர் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிசாசு 2' படத்தை இயக்கிமுடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

இந்நிலையில் 'பிசாசு 2' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. வழக்கமான மிஷ்கின் பட பாணியில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளிவந்துள்ள இந்த டீரில் வசனம் எதுவும் இடம்பெறவில்லை. ஆண்ட்ரியாவின் ஸ்கிரின் ப்ரசன்ஸ் பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.