Skip to main content

கம்யூனிஸ்டா?... அம்பேத்கரிஸ்டா? ; பா.ரஞ்சித் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர்

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

director lenin bharathi shared his thoughts about pa.ranjith natchathiram nagargirathu

 

பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. சமூகத்தில் காதலின் பரிணாமங்களை பற்றி பேசும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும் இப்படத்தில் இடம்பெற்ற வசனம் பேசும்பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக ஒரு காட்சியில் கலையரசன் கதாபாத்திரம் துஷாரா கதாபாத்திரத்திடம் நீங்க கம்யூனிஸ்ட்டா? என்று கேட்க அம்பேத்கரிஸ்ட் என பதிலளிப்பார் துஷாரா. இந்த வசனம் தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

 

அந்த வகையில் 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தின் இயக்குநர் லெனின் பாரதி தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக லெனின் பாரதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நீங்க கம்யூனிஸ்டா?  என்று கேட்டதற்கு, தான் ஒரு அம்பேத்கரிஸ்ட்  என்று கூறுவதை… கம்யூனிசம் சிறந்ததா? அம்பேத்கரியம் சிறந்ததா? என்கிற தொனியில் திரித்து தோழர் பா.ரஞ்சித் மீது தனிநபர் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பவர்கள் தங்களது அரசியல் பார்வையை சுய விமர்சனத்திற்கு உட்படுத்துவது நலம்" என குறிப்பிட்டுள்ளார். லெனின் பாரதியின் இப்பதிவை பா.ரஞ்சித் லைக் செய்துள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்” - கமலுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
lenin bharathi replied to kamalhassan statement regards pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியைத் தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்துப் பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்துள்ளனர் எனச் சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியைக் கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரைக் கொலை செய்து மூட்டைக் கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களை மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சம்பவம் குறித்து பதிவிட்ட அவர், “ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி, மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம். 

மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதை வஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் கமல்ஹாசன் பதிவை இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, “எங்கே போகிறோம் என்று ஆராய்வதைப் போல், கதாநாயக வழிபாட்டுச் சினிமாக்கள் மூலம் ஆணாதிக்கம், வன்முறை, போதை, வெற்றுப் பெருமை, வக்கிரம், குரூரம் என இளம் உள்ளங்களில் விஷக் விதைகளை விதைத்து, ‘எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்’ என்று ஆராய வேண்டிய பொறுப்பும் சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“நாட்டை ஆளத் துடிக்கின்ற நடிகர்கள் பேசமாட்டார்கள்” - லெனின் பாரதி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
lenin bharathi about trisha issue in mangai audio launch

குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் கயல் ஆனந்தி, துஷி, ஆதித்ய கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மங்கை. ஜாஃபர் சாதிக் தயாரித்துள்ள இப்படத்திற்கு தீசன் இசையமைத்துள்ளார். நாளை (23.02.2024) வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்ட நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குநர் லெனின் பாரதியும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். 

அவர் பேசுகையில், “பொதுவாக ஆண் கதாபாத்திரத்தை மையமாக வைக்கும் டைட்டில், ரொம்ப கம்பீரமா இருக்கும். அதில் இன்றைக்கு நிறைய பேர் சொல்லிக் கொண்டிருக்கும் ஆண்ட பரம்பரை போன்ற பெருமை விஷயங்கள் தான் இருக்கும். ஆனால் இந்த படத்தின் டைட்டில் மங்கை, அந்த டிசைனில் கீரல்கள், தாக்குதல்கள்... டைட்டில் டேக் லைனில் ‘ட்ராவல் ஆஃப் வுமன்’ என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கிறது. அது மிகப் பெரிய அரசியல். எத்தனையோ ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடக்கப்படுகிற மக்களுக்காக குரல் கொடுக்கிறோம். அவர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பு செலுத்தியிருக்கிறோம். ஆனால் காலங்காலமாக தொடர்ந்து எல்லா சாதிகளிலும், சமூகங்களிலும், மதங்களிலும் ஒடுக்கப்படுபவர்கள் பெண்கள். அப்படிப்பட்ட சூழலில் மங்கை என்ற டைட்டில் முக்கியமானதாக இருக்கிறது. 

வெங்கட் பேசும் போது, நடிகர்கள் யாருமே த்ரிஷா விவகாரம் பற்றி கேட்கமாட்றாங்க என்று சொன்னார். எப்படி கேட்பாங்க. இன்றைக்கு உள்ள அத்தனை முன்னணி நடிகர்களும் பெண் உடலை வச்சு ஜெயிச்சவங்க. இன்றைய உச்ச நட்சத்திரங்கள், அடுத்து நாட்டை ஆள துடிக்கின்ற நடிகர்கள், எல்லாமே, அவர்களது ஆரம்பக்கட்ட படங்களில், பெண் உடலை மைய்யமா வச்சு தான் சினிமாவில் பயணப்பட்டு வந்திருக்காங்க. நான் சின்ன வயசுல இருக்கும் போது ரஜினி, கமல் பட போஸ்டரில் சில்க் ஸ்மிதா படம் தான் பெருசா இருக்கும். அதனால் அப்படி இருக்கும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் இந்த நடிகர்கள் கேள்வி எழுப்ப மாட்டார்கள். அந்த கனவை நாம் காணக் கூடாது. ஏனென்றால் அவர்கள் தான் பெண்களை உடலாக பார்க்கக்கூடிய சினிமாவை தொடர்ச்சியா எடுப்பது. பெண்ணை வெறும் உடலா மட்டுமே பாவிக்க கூடிய போக்கை ஏற்படுத்துகிற நாயகர்கள் ஒரு போதும் பெண் விடுதலைக்காக பேச மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசினார்கள் என்றால் அதற்கு பின்னால் ஒரு சுயநலம் இருக்கும். பெண்களை நாம் உடலாக போதிக்காமல் சக மனிதனாக போதிக்க வேண்டும். அதை இப்படம் சொல்லிக்கொடுக்கும்” என்றார்.