Skip to main content

”கதை சூர்யாவுக்காக பண்ணது; அந்த கேரக்டர் விஜயகாந்துக்காக பண்ணது” - ரகசியம் உடைத்த இயக்குநர் ஹரி

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Director Hari

 

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'யானை' திரைப்படம், விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் ஹரியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் யானை படம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், சிங்கம் 2 படத்தில் சூர்யா கதாபாத்திரம் உருவான விதம் குறித்தும் பகிர்ந்துகொண்டார். அவை பின்வருமாறு...

 

"போலீஸ் வேலையில் இருக்கும் ஹீரோ மளிகைக்கடை வைப்பதுதான் தன்னுடைய விருப்பம் எனச் சொந்த ஊருக்குச் சென்று மளிகைக்கடை வைக்கிறார். அந்தப் பகுதியில் என்னென்ன பிரச்சனைகள் நடக்கிறது என்பதை வேவு பார்த்து நேரம் வரும்போது போலீஸாக பதவி ஏற்பார். இதைத்தான் சிங்கம் 2 படத்திற்கான கதையாக வைத்திருந்தேன். கதாநாயகனை மளிகைக் கடைக்காரராக வைத்து இண்டர்வெல் வரை கொண்டுசென்றால் சுவாரசியமாக இருக்காது என்பதால் என்.சி.சி மாஸ்டராக மாற்றினேன். 

 

நான் உதவி இயக்குநராக வேலை பார்த்த காலத்தில் கேப்டன் விஜயகாந்திற்காக ஒரு கதை எழுதியிருந்தேன். அதில் அவருக்கு என்.சி.சி. மாஸ்டர் கதாபாத்திரம்தான். சிங்கம் 2 படத்தில் ஹீரோவை என்.சி.சி. மாஸ்டராக்கிய பிறகு அதைச் சுற்றி கதையை உருவாக்கினேன். பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணிற்கு அவர் மேல் ஆசை வந்தால் எப்படி இருக்கும், அதை எப்படி மெச்சூர் மேனான அவர் கையாளுவார் எனப் பள்ளியைச் சுற்றியே கதையை உருவாக்கி படத்தில் சுவாரசியத்தைக் கூட்டினோம்.

 

அதேபோல சிங்கம் 2 படத்தில் ஆயுதக் கடத்தலை மையப்படுத்தி தான் கதைக்களத்தை உருவாக்க நினைத்தோம். சிங்கம் முதல் பாகத்தில்கூட அதற்கான லீடைத்தான் கொடுத்திருப்போம். ஆனால், தமிழ்நாட்டில் ஆயுதக் கடத்தலெல்லாம் நடப்பதில்லை. அதைவிட மோசமான போதைப்பொருள் கடத்தல்தான் அதிகம் நடக்கிறது. அதனால் கதைக்களத்தைப் போதைப்பொருள் கடத்தல் உலகத்திற்கு மாற்றினோம்”. இவ்வாறு இயக்குநர் ஹரி தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்