Skip to main content

"என்றும் அவன் தோற்பதில்லை!" - பாரதிராஜா நெகிழ்ச்சி

Published on 07/12/2020 | Edited on 08/12/2020

 

 

 

சமூக ஊடகங்களில் அதிரடியான, வித்தியாசமான, வினோதமான விஷயங்கள் வைரலாவது உண்டு. இடையிடையே சில அற்புதமான, அழகான விஷயங்கள் வைரலாவதுமுண்டு. அப்படித்தான் கடந்த வாரத்தில் ஒரு சின்ன, அழகான வீடியோ ஓவியம் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலராலும் பகிரப்பட்டு, பாராட்டப்பட்டது. அதை உருவாகியிருந்தவர் 'மனசெல்லாம்' திரைப்படத்தின் இயக்குனரும் ஓவியருமான சந்தோஷ். ஏற்கனவே இயக்குனர் லிங்குசாமி, நடிகர் சூரி உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து பாராட்டியிருந்தார்கள். தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜா, அந்த வீடியோவை பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

 

"கலைஞனின் வெற்றி தோல்வி எல்லாம் வெற்று வார்த்தைகள்தான், வாழ்வில் என்றும் அவன் தோற்பதில்லை. இயற்கை கொடுத்த நொடிப்பொழுதையும் காவியமாக ஒரு கதை சொல்லி "மனசெல்லாம்" கொள்ளையடித்துச் சென்ற சந்தோஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..." என்று ட்வீட் செய்துள்ளார். பாரதிராஜாவின் பாராட்டுக்கு முக்கியத்துவமுள்ளது. ஏனெனில் அந்த வீடியோவின் பின்னணியில் ஒலிக்கும் 'புத்தம் புது காலை' பாடல் பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாரதிராஜாவிற்கு வில்லனாக நடித்துள்ளேன்” - ஜி.வி. பிரகாஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
gv prakash speech at kalvan audio launch

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாரதிராஜா, "இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜி.வி. நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத் தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்" என்றார். 

நடிகர் ஜி.வி. பிரகாஷ், "இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

Next Story

பவதாரிணி உடலைப் பார்த்து கதறி அழுத பாரதிராஜா

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
bharathiraja tribute to bhavatharini

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த இளையராஜா குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

விமானம் மூலம் சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பவதாரிணியின் உடல், தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பவதாரிணியின் உடல், நேற்று இரவு சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டது. பண்ணைபுரம் கிராமத்தில், இளையராஜா பண்ணை வீட்டில் தாயார் சமாதிக்கு அருகே பாடகி பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதனிடையே பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பவதாரிணி உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாரதிராஜா, பவதாரிணி உடலுக்கு மாலை அணிவித்து கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். ஏற்கனவே எக்ஸ் தளத்தில், “என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.