Skip to main content

திரும்பி வாங்க பாலா...!!!

 

director bala

 

பாலா...  இந்த இரண்டு எழுத்துப் பெயரை சுமந்து நிற்கும் மெலிந்த உருவ மனிதர் செய்த விஷயங்கள் மெலிந்தவை அல்ல. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் தமிழ் சினிமாவின் முகத்தைச் சீவி சிங்காரித்து, பூ, பொட்டு  வைத்து அழகு பார்த்த கரங்களில் இயக்குநர் பாலாவின் கரங்கள் முதன்மையானவை.

 

வணிக திரைப்படங்கள் என்ற பெயரில் அரைத்த மாவையே அரைத்து இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தன்னுடைய எதார்த்தமான சினிமாவால் ஒரு அதிர்வை ஏற்படுத்தியவர், புதிய போக்கை உருவாக்கியவர். முகத்தில் அறையும் யதார்த்தம், உண்மை பாத்திரங்கள், சினிமா கண்டுகொள்ள பயப்படும் விளிம்பு நிலை மனிதர்கள், வடிகட்டப்படாத வன்முறை என பல வகைகளில் தனித்து நின்ற இவரது படத்தின் கதாபாத்திரங்கள் சுமக்கும் வலி அளவுகொள்ள முடியாததாக இருக்கும். இவ்வளவு வலிகளை எப்படி ஒரு மனிதனால் கற்பனையில் எழுத முடியும் என்ற கேள்விதான் இவர் படம் குறித்து நமக்கு இருக்கும் பிரமிப்புக்கான தோற்றுவாய். அதற்கான பதிலைத் தேட வேண்டும் என்றால் இயக்குநர் பாலாவின் வாழ்க்கைப் பயணத்தைதான் நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

 

தேனி மாவட்டத்தில் உள்ள நாராயணத்தேவன்பட்டி எனும் ஊரில் பிறந்தவர் பாலா. அவரது குடும்பத்தில் மொத்தம் எட்டு குழந்தைகள். "சிறு வயது முதலே வீட்டிற்குச் சொல் பேச்சுக் கேட்காத அடங்காத பிள்ளையாக இருந்தேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் காசு திருடுவேன். அதனால் எனக்கு அபேஸ் பாலையா என்ற பெயரும்  ஊரில் இருந்தது. சின்ன வயதிலேயே எல்லா போதை வஸ்துக்களும் எனக்கு அறிமுகமாகி விட்டது" எனத் தன்னுடைய கடந்த கால அனுபவங்களைப் பலமுறை பாலா வெளிப்படையாகவே பேசியுள்ளார். ஒரு மனிதன் தான் அனுபவித்த வலிகளைப் பேசும் போது கேட்பவர்களுக்கும் மனது வலிப்பதுதான் மனித இயல்பு. ஆனால் பாலா பேசும்போது மட்டும் மனம் நம்மையறியாமல் அதை ரசிக்கும். புரியாதப் புதிரை புரிந்து கொள்வதற்கான முனைவாகத்தான் இது இருக்கும்.

 

பின் சென்னைக்கு வந்து இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களிடம் உதவி இயக்குநராக சேர்ந்து சினிமாவை முறையாகக் கற்று நெடும்போரட்டத்திற்கு பின் தன்னுடைய முதல் படத்தைத் தொடங்குகிறார். படம் பூஜை நாளன்றே கைவிடப்படுகிறது. மனம் சோர்ந்து விடாமல் தொடர் முயற்சிக்குப் பின் சேது படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இம்முறை எந்தத் தடங்கலும் இல்லாமல் படப்பிடிப்பு நிறைவடைந்த நிம்மதியில் பாலா இருக்கையில் படம் வாங்க எந்த விநியோகஸ்தரும் முன்வரவில்லை என்ற செய்தி பேரிடியாக வந்து விழுகிறது. "ப்ரிவ்யூ தியேட்டர்லயே என் படம் நூறு நாள் ஓடுச்சு" என்று அதையும் பின்னாளில் பெருமையாக, நகைச்சுவையாகச் சொல்வார் பாலா. இறுதியில் படம்  திரையரங்குகளில் வெளியாகிறது.

 

director bala

 

முதல் ஒரு வாரம் கூட்டமே இல்லை. திரையிடப்பட்ட பல திரையரங்குகளில் படம் நிறுத்தப்படுகிறது. ஆனால், பத்திரிகைகளும் விமர்சனங்களும் படத்தைக் கொண்டாட, மெல்ல சினிமா ரசிகர்களின் கவனம் திரும்பி படத்தைப் பார்க்கின்றனர். சென்னை, மதுரை போன்ற சில இடங்களில் மெல்ல கூட்டம் பெருக, அடுத்தடுத்து சிறு நகரங்களிலும் படம் மீண்டும் திரையிடப்படுகிறது. கல்லூரி தேர்தல், நண்பர்கள் கொண்டாட்டம், காதல், பிரிவு என பொழுதுபோக்குப் படத்துக்கான எல்லா அம்சங்களையும் யதார்த்தமாக, மிகைப்படுத்தப்பட்ட மசாலா இல்லாமல், நிஜமான கல்லூரியை, கும்பகோணத்தைக் காட்டியிருந்த பாலாவின் படம் மக்களைக் கவர்ந்தது. 

 

அப்போதெல்லாம் செகண்ட் ரிலீஸ் என்று சொல்வார்கள். ஒரு நகரின் நல்ல திரையரங்குகளில் நன்றாக ஓடிய திரைப்படங்கள், மீண்டும் அந்நகரின் இரண்டாம் தர அரங்குகளில் வெளியிடப்படும். அடுத்த நகருக்கு அருகே உள்ள சற்று வளர்ந்த கிராமங்களுக்குச் செல்லும். மல்டிப்ளெக்ஸ்களும் யூ-ட்யூப் விமர்சகர்களும் இல்லாத, எந்த அவசரமும் இல்லாமல் படங்களை ரசித்த காலம் அது. பாலாவின் 'சேது'வும் பல ஊர்களில் செகண்ட் ரிலீஸ் ஆனது. ஆனால், தலைகீழாக. முதலில் என்ன படம், யார் இயக்குனர் என்று தெரியாமல், அதுவரை வெற்றிகள் கொடுக்காத நடிகரான விக்ரம் நடித்திருந்ததால் இரண்டாம் தர, சுமார் திரையரங்குகளில் வெளியான படம், பிறகு செகண்ட் ரிலீசாக ஒவ்வொரு நகரின் முக்கிய அரங்குகளில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் பல ஊர்களில் ஓடியது. அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவரும் அறிந்ததே. மூன்றாவது படமான 'பிதாமகன்' அஜித்தின் 'ஆஞ்சநேயா', விஜய்யின் 'திருமலை'க்கு நடுவிலும் முக்கிய ரிலீசாக வெளியாகி தீபாவளி வின்னரானது.

 

http://onelink.to/nknapp

 

நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, நாச்சியார் எனத் தன்னுடைய திரைமொழியில் அடுத்தடுத்து சிறந்த படங்களைக் கொடுத்து தனக்கான ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இந்திய அளவில் தனக்கான இடத்தையும் பிடித்துக்கொண்டார், பாலா. தேசிய விருதுகள் உட்பட பாலாவும் அவரது படங்களும் பெற்ற விருதுகள் ஏராளம். ஒரு கட்டத்தில், எந்தவொரு நடிகரையோ தொழில்நுட்பக் கலைஞரையோ நீங்கள் யார் படத்தில் பணியாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்டால் அவர்களின் முதல் தேர்வு இயக்குநர் பாலாவின் படமாகத்தான் இருந்தது. அதற்குச் சரியான காரணமும் இருந்தது. விக்ரம், சூர்யா, ஆர்யா, அதர்வா என பாலாவின் கைபட்ட நடிகர்கள் ஸ்டார்களானார்கள். விஷால், பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு நல்ல நடிகரென்ற பெயர் 'அவன் இவனி'ல்தான் கிடைத்தது. எக்கச்சக்க சர்ச்சைகளும் உண்டு அஜித்துடன் பிரச்னை, அன்புச்செழியனுடன் நட்பு, தயாரிப்பாளர்களை அவமதித்தார், நடிகர்களை மோசமாக நடத்தினார், வர்மா பிரச்னை என்று பல குற்றச்சாட்டுகள் உண்டு. 'நான் ஒரு காட்டான், அப்படித்தான் சில நேரம் நடந்துக்குவேன்' என்று பாலாவே பேட்டிகளில் கூறியும் இருக்கிறார். அனைத்தையும் தாண்டி தமிழ் சினிமாவைத் திசை மாற்றிய ஒருவர் என்ற பங்கை யாரும் மறுக்க முடியாது. பாலுமகேந்திரா மீதான இவரது அன்பு ஒன்றே இவரது மென்மை பக்கத்திற்குச் சரியான உதாரணம்.

 

தன்னுடைய திரைமொழியை மாற்றாமல் அதை இன்னும் மெருகேற்றி நல்ல நல்ல திரைப்படங்களை இயக்குநர் பாலா தொடர்ந்து தரவேண்டும் என்பதே அவரை ரசித்த சினிமா விரும்பிகளின் எதிர்பார்ப்பு. திரும்பி வாங்க பாலா...

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்