90ஸ் கிட்ஸை ஆச்சரியத்திலும் பயத்திலும் மிரள வைத்த முதல் ஆங்கில திரைப்படம்... பள்ளிகளே தங்கள் மாணவர்களை சாரை சாரையாக அழைத்துச் சென்று பார்க்கவைத்த படம்... திரையரங்கில் ஒளி - ஒலி அமைப்பு இத்தனை தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்பதை நம்மையெல்லாம் உணர வைத்த திரைப்படம்... ஜுராசிக் பார்க். 1993ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி இன்றுடன் 25ஆண்டுகளை இத்திரைப்படம் நிறைவு செய்துள்ளது. இதுவரை ஜுராசிக் பார்க், தி லாஸ்ட் வேர்ல்ட்- ஜுராசிக் பார்க், ஜுராசிக் பார்க் 3, ஜுராசிக் வேர்ல்ட், ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலிங் கிங்டம் என்று ஐந்து பாகங்கள் வெளியாகியுள்ளது இதன் வசூல் 25 ஆயிரம் கோடிக்கு மேல். ஜூராசிக் வேர்ல்ட் கதையானது 1990 மைக்கேல் கிரைட்டன் என்பவரின் ஜுராசிக் பார்க் என்ற புத்தகத்தை தழுவி உருவாக்கப்பட்டது. பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த டைனோசர் இனத்தை ஸ்டீபன் ஸ்பீல் பர்க் திரைவழியாக தொழில்நுட்பத்தை உபயோகித்து மீண்டும் இவ்வுலகிற்கு காட்சிப்படுத்தி உலகையே வியக்க வைத்தார். இந்தத் திரைப்படம்தான் அடுத்து வந்த பல திரைப்படங்களுக்கு கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு முன்னோடியாக விளங்கியது. இந்தத் திரைப்படத்தின் அப்போதைய வசூல் ஆயிரம் பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ஆறாயிரம் கோடிக்கு மேல். இந்த திரைப்படத்தைப் பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள் இதோ...

1. ஜுராசிக் பார்க் படத்தில் வரும் டைனோசர்களை உருவாக்க நிகழ்ந்த உழைப்பு மிகப்பெரியது, பல மாதங்கள் நிகழ்ந்தது. படத்தின் நீளம் 127 நிமிடங்கள், அதில் டைனோசர்கள் வருவது வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே... அந்த 15 நிமிடங்களுக்காகத்தான் அத்தனை உழைப்பு... அந்தப் பதினைந்து நிமிடங்களால்தான் அத்தனை புகழ்பெற்றது இந்தப் படம்.
2. மைக்கேல் கிரைட்டனிடமிருந்து இந்தக் கதையைப் பெற்று அதற்கு ஐந்து லட்சம் டாலர்கள் வழங்கினர். அதன் பின் இதன் திரைக்கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்கு மலிலா ஸ்காட்ச் மர்மோ மற்றும் டேவிட் கோயிப் ஆகியோர் திரைக்கதை அமைத்தனர்.

3. ஒரு காட்சியில் டைனோசர் வரும்பொழுது தண்ணீர் இருக்கும் கண்ணாடி டம்ளர் அதிரும். ஒருமுறை ஸ்டீபன் ஸ்பீல் பர்க் தனது காரில் ஒரு பாடலை அதிக ஒலிஅளவில் வைத்துக்கேட்டுள்ளார். அப்போது தண்ணீர் இருந்த பாட்டில் அதிர்ந்தது. அதை அடிப்படையாக வைத்துதான் அந்தக் காட்சியை அமைத்தார். அந்தக் காட்சி படம் பார்த்த ரசிகர்களையும் அதிர வைத்தது.
4. 1995 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் என்.பி.சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது 65 மில்லியன் மக்கள் பார்த்தனர். இது மிகப்பெரிய சாதனையாக அமைந்தது. அப்பொழுது தொலைகாட்சி வழியாக மிக அதிகமானோர் பார்த்த படம் என்ற சாதனையை இது நிகழ்த்தியது.
5. யூனிவெர்சல் ஸ்டூடியோ பொறியாளர்கள் படத்திற்காக ஜுராசிக் பார்க்கை வடிவமைத்தனர். அதன் பின் அதனை மேலும் ஒரு சில வேலைப்பாடுகள் செய்து 1996ஆம் ஆண்டு திறந்தனர். இந்தப் படத்தை உருவாக்க ஆன செலவை விட அந்தப் பூங்காவை உருவாக்க இருமடங்கு செலவாகியுள்ளது.

6. யூனிவர்சல் ஸ்டூடியோ நிறுவனம் ஜுராசிக் பார்க் வெளியாகி 20வது ஆண்டான 2013 ஆம் ஆண்டு படத்தை 10லட்சம் டாலர்கள் செலவு செய்து 2டியிலிருந்து 3டியாக மாற்றி வெளியிட்டது. அப்போதும் 45 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது.
7. இந்த திரைப்படம் சிறந்த ஒலிக்கலவை, சிறந்த இயக்குனர் என்று ஏழு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்றது. அதுமட்டுமில்லாமல் பல உலக விருது விழாக்களில் 20 விருதுகளைப் பெற்றது.
8. இதில் ரிச்சர்ட் அட்டென்பரோ திரைத்துறையிலிருந்து ஓய்வுபெற்று 15 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படத்தில் 'ஜான் ஹாமோண்ட்' என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்தார்.