Advertisment

"நாட்டுப்புறப்பாட்டு, நம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்தது" - திண்டுக்கல் ஐ. லியோனி

dindukal i leoni speech in Dappankuthu event

பாரதிராஜாவின் 'தெற்கத்தி பொண்ணு' நடிகர் சங்கர பாண்டி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'டப்பாங்குத்து'. மருதம் நாட்டுப்புற நிறுவனம் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஜெகநாதன் இப்படத்தை தயாரிக்க கதை, திரைக்கதை, வசனத்தை எஸ். டி. குணசேகரன் எழுத, கிராமிய கலையின் நுட்பத்தை ஆய்வு செய்துள்ள ஆர். முத்து வீரா இயக்கியிருக்கிறார். தீப்தி, துர்கா என இரண்டு நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தெருக்கூத்து கலைஞர்களும் நடித்துள்ளனர். சரவணன் இசையமைத்திருக்கிறார்.

Advertisment

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பட்டிமன்ற பேச்சாளரும், நடிகரும், தயாரிப்பாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும், நாட்டுப்புற கலைஞர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Advertisment

இதில் திண்டுக்கல் ஐ. லியோனி பேசுகையில், ''இன்று இந்த அளவிற்கு புகழ் பெற்று உங்கள் முன் நிற்பதற்கு அடித்தளமிட்டவர் மதுரை ராம்ஜி கேசட் நிறுவனத்தின் ஜெகநாதன் தான். வத்தலகுண்டு பகுதியில் தான் என்னுடைய பட்டிமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பேராவூரணி என்ற ஊரில் நீலகண்ட விநாயகர் ஆலய திருவிழாவில் என்னுடைய பட்டிமன்ற பேச்சை ஒருங்கிணைத்திருந்தார்கள். அப்போது லியோனி என்றால் யார்? என்றே யாருக்கும் தெரியாது. அந்த நிகழ்ச்சிக்கு தொடக்கத்தில் ஆறு பேர் மட்டுமே பார்வையாளராக இருந்தனர். அந்த நிகழ்ச்சியின் தலைப்பு சிறந்த பாடலுக்கு பொருத்தமானவர் கண்ணதாசனா? பட்டுக்கோட்டையாரா?. நான் அந்த பட்டிமன்றத்தில் பேசி, பாடிக்கொண்டிருந்த போது... ஊர் முழுக்க மைக் செட் கட்டி இருந்ததால் அரை மணி நேரத்தில் அங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு விட்டனர்.

மணிராஜ் என்பவர் ஆலங்குடி கேசட்ஸ் என்ற பெயரில் என்னுடைய பட்டிமன்றத்தை பாதியில் பதிவு செய்து வெளியிட்டார். அதன் மூலமாகத்தான் என்னுடைய குரல் வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.இந்தத் தருணத்தில் அதிகாரப்பூர்வமான முறையில் ஒரு பட்டிமன்றத்திற்கு தலைப்பு வைத்து, அதில் என்னையும் என்னுடைய குழுவினரையும் பேச வைத்து, அதை பதிவு செய்து, உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் ராம்ஜி கேசட்ஸ் நிறுவனத்தினர். அதன் பிறகு ஏறக்குறைய 15 தலைப்புகளில் பேச வைத்து உலகம் முழுவதும் இன்று வரை என் புகழை பரப்புரை செய்கிறார்கள் மதுரை ராம்ஜி கேசட்ஸ் நிறுவனம்.

அந்த நிறுவனம் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் 'டப்பாங்குத்து'. டப்பாங்குத்து என்ற சொல் எப்படி பிரபலமானது என்றால், நரிக்குறவர் இன மக்கள் தங்களது கழுத்தில் டால்டா டப்பாக்களை அணிந்து கொண்டு அதில் தாளம் போட்டு பாட்டு பாடுபவர்கள். இதை பார்த்த இரண்டு முதல்வர்களான எம்ஜிஆர்- ஜெயலலிதாவும் தங்களது கழுத்தில் அணிந்து, ஒரு திரைப்படத்தில் 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க..' என பாட்டு பாடி பிரபலப்படுத்தினார்கள். நாட்டுப்புறப்பாட்டு என்பது நம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்தது. கர்நாடக சங்கீதம் ஆட்சி செய்த அந்த காலத்தில் முதன்முதலாக தமிழ் திரைப்படத்தில் நாட்டுப்புற பாடல்களை அறிமுகம் செய்தவர் கலைவாணர் என் எஸ் கே. 'நாட்டிற்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தானய்யா..' எனும் அற்புதக் கலைஞர்.

1957 ஆம் ஆண்டில் கே. வி. மகாதேவன் இசையமைத்து வெளியான 'வண்ணக்கிளி' படத்தில் இடம்பெற்ற 'சித்தாடை கட்டிகிட்டு..' என்ற கிராமிய பாடல் இன்று வரை பிரபலம். கரகாட்டத்திற்கு 'கரகாட்டக்காரன்' என்று ஒரு படம் வந்தது. வில்லுப்பாட்டிற்கு 'வில்லுப்பாட்டுக்காரன்' என்று ஒரு படம் வந்தது. பாட்டு படிப்பவனுக்கு 'எங்க ஊரு பாட்டுக்காரன்' என்ற படம் வந்தது. ஆனால் தெருக்கூத்து என்ற ஒரு கலையை மையப்படுத்தி வெளியாக இருக்கும் முதல் திரைப்படம் இந்த 'டப்பாங்குத்து'. தெருக்கூத்து என்பது ஒரு இருபது அடிக்குள் தான் இருக்கும். இங்கு ஒரு குழு, அங்கு ஒரு குழு, ஓடி ஓடி ஆடும். இந்த தெருக்கூத்தில் ஆடும் கலைஞர்கள் இந்தப் பாட்டு தான் என்றெல்லாம் அனைத்து வகையான பாடல்களும் பாடுவார்கள். மக்களை 10 முதல் 11 மணி நேரம் வரை சிரிக்க வைப்பதற்கு தெருக்கூத்து கலைஞர்களால் மட்டுமே இயலும்.

இந்த கலையில் கவர்ச்சியான பாடல் வரிகள் இருக்கும். குறிப்பாக 'மழை பெய்து ஊரெல்லாம் தண்ணி...' . ஆண்களுக்கு காமம் உச்சத்தில் இருக்கும் இரவு நேரத்தில் அவர்களின் அந்த எண்ணத்தை திசை மாற்றி... அதனூடாக கலை வடிவத்தை சொல்லி, அவர்களை சிரிக்க வைத்து தெருக்கூத்து கலையை வளர்ப்பது என்பது கடினமானது. அந்தக் கலைஞர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது. தெருக்கூத்து கலைஞர்களின் கடும் உழைப்பை போற்றும் வகையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

Dindukkal I.Leoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe