/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/06_18.jpg)
விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
தெலுங்கில் 'வாரசுடு' என்ற தலைப்பில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், "நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியதை நினைவுகூர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் 'வாரிசு' படம் தெலுங்கில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகாத சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சி சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் 'வாரிசு' படம் தெலுங்கில் அதிகமான திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தார்கள்.
இதனைத்தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், "படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. சொன்னபடி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்" எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த சிக்கல் தொடர்பாக 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், "முதலில் 'வாரிசு' படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத்தெரிவித்தது நாங்கள் தான். அதன் பிறகு மற்றப் படங்கள் அறிவித்தன. பண்டிகை நாட்களில் 'வாரிசு' படம் உள்பட வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் போதிய திரை கிடைக்கும் அளவுக்கு திரையரங்குகள் இருக்கின்றன. அதனால் எந்தச் சிக்கலும் இல்லாமல் வாரிசு படம் தெலுங்கில் அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும்" எனத்தெரிவித்துள்ளார்.
Follow Us