பார்க்கிங், லப்பர் பந்து என அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவில் ராஜநடை போட்டுக் கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண், அடுத்ததாக தீபாவளி திருநாளில் டீசல் படம் மூலம் களத்தில் குதித்து இருக்கிறார். வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த டீசல் திரைப்படம் ஹரிஷ் கல்யாணுக்கு ஹார்ட்ரிக் வெற்றியை கொடுத்ததா?
வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் வரும் கச்சா எண்ணெய் மிகப் பெரிய ராட்சத குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு ஃபேக்டரிகளுக்கு செல்வது வழக்கம். கடலோரம் ஒட்டியுள்ள மீனவ கிராமங்கள் வழியாக செல்லும் இந்த ராட்சத குழாய்களில் இருந்து கச்சா எண்ணெய்யை டன் கணக்கில் திருடி அதைப் பெட்ரோல் டீசலாக மாற்றி அதை கள்ளச் சந்தையில் விற்று லாபம் பார்க்கும் சாய்குமார் மற்றும் அவரது வளர்ப்பு மகன் டீசல் என்கின்ற ஹரிஷ் கல்யாண் அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு தன் கிராமத்தில் உள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்த புள்ளைக்கு உறுதுணையாக போலீஸ் வினய் இருக்கிறார். இதற்கிடையே இந்த கொள்ளையில் புது வராக வினயின் நண்பர் விவேக் பிரசன்னா இணைய பிரச்சனை வெடிக்கிறது. பல ஆண்டுகளாக ஸ்மூத்தாக நடக்கும் இந்த திருட்டில் விவேக் பிரசன்னா காலடியை எடுத்து வைத்தவுடன் பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. இதனால் சாய் குமார் சம்பந்தப்பட்ட சிண்டிகேட் முடக்கம் ஏற்பட பிறகு இதை வைத்து இதற்குள் எவ்வளவு பெரிய கார்ப்பரேட் அரசியல் இருக்கிறது? அதை நாயகன் டீசல் என்கின்ற ஹரிஷ் கல்யாண் எப்படி கையாண்டார்? இந்தக் கச்சா எண்ணெய் திருட்டால் மக்கள் மற்றும் அரசுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? என்பதே டீசல் படத்தின் மீதி கதை.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல் டீசலுக்கு பின்னால் எவ்வளவு பெரிய அரசியல் இருக்கிறது. அது எப்படி எந்த அளவு எந்த விலையில் நம்மை வந்தடைகிறது. அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன? போன்ற சமூகத்துக்கு ஒரு அவசியமான மிகவும் வித்தியாசமான ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதை விறுவிறுப்பான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி. படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் அவர்கள் அனைவரையும் வைத்துக்கொண்டு இந்த கதைக்கு ஏற்றார் போல் காட்சிகளை நேர்த்தியாகவும் அதே சமயம் விறுவிறுப்பாகவும் நகர்த்தி இருக்கிறார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி. கதை 2014 ஆண்டோடு முடிகிறது அதற்கு முன் நடந்த கச்சா எண்ணெய் திருட்டை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குநர் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் கொடுத்து முக்கியத்துவத்தை சிறப்பான முறையில் கொடுத்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்த இயக்குநர் காட்சிகளில் இன்னமும் கூட அழுத்தத்தை பூட்டி இருக்கலாம். படம் அந்த காலகட்டத்தை ஒட்டி இருந்தாலும் தலையோட்டமும் அந்த காலத்தை ஒட்டியது போல் இருப்பது சற்று அயற்சியை கொடுத்திருக்கிறது. இருந்தும் படத்தில் சொல்லப்பட்ட விஷயம் மிகவும் பிரஷ்ஷாக இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது. குறிப்பாக படத்தில் சீன்களாக பல்வேறு நல்ல சீன்கள் ஒன்றிணைந்து இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக மாறியிருக்கிறது.
ஹரிஷ் கல்யாண் படத்துக்கு படம் நடிப்பில் மெருகேறிக்கொண்டே செல்கிறார். இந்தப் படத்தில் மெட்ராஸ் பாஷை பேசிக்கொண்டு தவுலத்தாக தெரியும் கதாபாத்திரத்தில் வரும் அவர் படித்த லோக்கல் பையன் வேடத்தை சிறப்பான முறையில் செய்து இருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் மற்றும் புத்திசாலித்தனமாக காய் நகர்த்தும் காட்சிகளில் சிறப்பான பங்களிப்பை குறித்து கவனம் பெற்று இருக்கிறார். மிகவும் கவனமாக கதை தேர்வு செய்யும் ஹரிஷ் கல்யாண் இந்த முறையும் சோடை போகவில்லை. வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார் அதுல்யா ரவி. அவருக்கு படத்தில் அதிக வேலை இல்லை. ஹரிஷ் கல்யாண் தந்தையாக வரும் சாய்குமார் மனதில் பதிகிறார். போலீஸ் வில்லனாக வரும் வினய் தனக்கு கொடுக்கப்பட்ட கிரே ஷேட் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு வில்லனாக வரும் விவேக் பிரசன்னா வழக்கம்போல் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார். கார்ப்பரேட் வில்லனாக வரும் சச்சின் தனக்கு கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். ஹரிஷ் என் நண்பராக வரும் டைகர் கார்டன் தங்கதுரை கலகல பூட்டி இருக்கிறார். மற்றபடி படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அவர்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.
திபு நினன் தாமஸ் இசையில் பச்சை குத்திக்கினேன் பாடல் ஹிட் ரகம். அதேபோல் பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார். ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் எம் எஸ் பிரபு ஆகியோரது ஒளிப்பதிவில் கடல் மற்றும் அதை சுற்றி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கச்சா எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் திருட்டு மற்றும் அதை சுற்றி இருக்கும் அரசியலை முன்னிறுத்தி அதை சிறப்பான முறையில் தோலுரித்துக் காட்டி இந்த டீசல் படத்தை உருவாக்கிய இயக்குனர் அதை நேர்த்தியான முறையில் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
டீசல் - உலக அரசியல்!