Did it raise awareness? - 'Marutham' review! Photograph: (movie)
விவசாயம் மற்றும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி அதில் சில படங்கள் வரவேற்பையும் பல படங்கள் சொதப்பியும் இருக்கின்றன. அதில் பெரும்பான்மையான படங்கள் நெகட்டிவ் ஷேடில் தான் இருக்கும். தற்போது இதேபோன்ற கதை அம்சத்தை கொண்டு வெளியாகியிருக்கும் இந்த மருதம் திரைப்படம் மாறாக பாசிட்டிவ் ஷேடில் உருவாகி இருக்கிறது. அது ரசிகர்களை எந்த அளவு கவர்ந்திருக்கிறது?
ராணிப்பேட்டை சுற்றியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து அதில் நல்ல லாபம் பார்த்துக் கொண்டிருக்கும் விவசாயி விதார்த். அவர் தன் குடும்பத்தோடு கிராமத்தில் வாழ்ந்து கொண்டு விவசாயம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார். அவர் தன் மகனை எப்படியாவது கான்வென்ட் பள்ளியில் சேர்க்க வேண்டும் என எண்ணி தன் விவசாய நிலத்தை அருள்தாசிடம் அடகு வைக்கிறார் விதார்த். அந்த நேரம் பார்த்து இவரது நிலம் பேங்க் ஏலம் விட்டு வேறு ஒருவருக்கு விற்று விடுகிறது. அந்த நிலத்தின் மீது விதார்த்தின் தந்தை கடன் வாங்கி இருப்பதாகவும் அதனால் வங்கி அந்த இடத்தை ஏலம் விட்டதாகவும் தகவல் இவருக்கு தெரிகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விதார்த் தன் தந்தை அப்படி செய்திருக்க மாட்டார் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் வங்கிக் கேட்பதாக இல்லை. இதனால் மனம் உடைந்த அவர் கோர்ட்டுக்கு செல்கிறார். கோர்ட்டில் அவருக்கு நியாயம் கிடைத்ததா, இல்லையா? உண்மையில் நடந்தது என்ன? என்பதே மருதம் படத்தின் மீது கதை.
பொதுவாக விவசாய சம்பந்தப்பட்ட படங்கள் என்றாலே நெகட்டிவாக தான் முடியும். ஆனால் இந்த படமும் முழுக்க முழுக்க பாசிடிவ் எண்டை நோக்கி சென்று இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. விவசாயம் செய்தாலே கஷ்டம் வரும் துன்பம் வரும் என காட்டிய திரைப்படங்களுக்கு மத்தியில் அதன் மூலம் நன்றாக சம்பாதித்து சந்தோஷமாக வாழலாம் என்ற பாசிட்டிவான விஷயத்தை இந்த படம் மூலம் கூறி விவசாயத்தையும் ஊக்குவித்து இருக்கிறார் இயக்குனர் வி கஜேந்திரன். ஒரு சிறிய பட்ஜெட்டில் விறுவிறுப்பான கதை அம்சம் கொண்ட படத்தை தனக்கு கொடுத்த சிறிய ஸ்பேஸில் கிடைத்த நடிகர்களை வைத்துக்கொண்டு சிறப்பான முறையில் திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும்படி கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார். படம் ஆரம்பித்து சிறிது நேரம் மெதுவாக நகர்ந்து போகப் போக வேகம் எடுத்து இரண்டாம் பாதியில் கோர்ட் டிராமா என பரபரப்பாக நகர்ந்து இறுதியில் பீல் குட் படமாக இந்த மருதம் முடிந்திருக்கிறது. ஒன்றும் அறியாத ஏழை விவசாயி மக்கள் வைத்திருக்கும் விவசாய நிலத்தை எப்படி ஒரு பேங்க் மேனேஜர் மோசடி செய்கிறார். அதன் மூலம் வங்கிகள் எப்படி லாபம் பார்க்கிறது என்ற புதுமையான கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை தன்னால் முடிந்தவரை சிறப்பாக கொடுத்து பார்ப்பவர்களுக்கு நல்ல படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார்.
நாயகன் விதார்த் வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை இந்த படத்திலும் வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்யும் விதார்த் இந்த படத்தையும் விட்டு வைக்காமல் சிறப்பாக செய்திருக்கிறார். சின்ன சின்ன முக பாவனைகள் வசன உச்சரிப்பு மூலம் உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தும் அவர் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து தமிழ் சினிமா தன்னை இன்னும் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உரக்க கூறி இருக்கிறார் தன் நடிப்பின் மூலம். நாயகி ரக்ஷனா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் அவருக்கு அதிக வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். தமிழுக்கு ஒரு அழகான நல்ல முகம். அந்த கதாபாத்திரத்துக்கும் ஏற்ற முகமாக தன் நடிப்பின் மூலம் மாறி இருக்கிறார். லொள்ளு சபா மாறன் இந்த படத்தில் காமெடி மட்டும் செய்யாமல் குணச்சித்திர கதாபாத்திரமாகவும் மாறி பார்ப்பவர்களை கலங்கடித்து இருக்கிறார். வில்லனாக வரும் சரவண சுப்பையா வழக்கமான வில்லத்தனம் காட்டி சென்று இருக்கிறார். குழப்பமான வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்தாஸ் ஆரம்பத்தில் சற்றே வில்லன் போல் தோன்றினாலும் இறுதி கட்டத்தில் சராசரி மனிதனாக நடித்து கதாபாத்திரத்திற்கு சிறப்பு செய்திருக்கிறார். மற்றபடி படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே அவரவர் வேலை நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கின்றனர்.
அருள் கே சோமசுந்தரம் ஒளிப்பதிவில் விவசாயம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. என் ஆர் ரகுநந்தன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பு.
நாம் தினசரி நாளிதழ்களில் படித்துவிட்டு கடந்து போகும் ஒரு பேங்க் சம்பந்தப்பட்ட மோசடியை கதையாக எடுத்துக் கொண்ட இயக்குனர் அதை சிறப்பான முறையில் நேர்த்தியாக படம் பிடித்து காட்டி பார்ப்பவர்களை ரசிக்க வைத்து படத்தையும் பிராமிசிங்கான படமாக மாற்றி இருக்கிறார்.