ADVERTISEMENT

சூப்பர் டூப்பர் படம் எப்படி..? சீக்ரெட் சொல்லும் நாயகன்!

12:20 PM Sep 12, 2019 | santhosh

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூப்பர் டூப்பர்'. அறிமுக நாயகன் துருவா நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை பற்றிய தன் அனுபவங்களைக் கூறும் துருவா....

ADVERTISEMENT

ADVERTISEMENT

''சூப்பர் டூப்பர் படத்தை எடுத்துக்கொண்டால் ஆக்ஷன், த்ரில்லர், ரொமான்ஸ், காமெடி அனைத்தும் இணைந்த ஒரு படமாக இருக்கும். 80 களில் 90களில் வந்த படங்களை எடுத்துக்கொண்டால் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படங்களாகவும், பெரும்பாலானவை வெற்றிப் படங்களாகும் இருக்கும். ஏனென்றால் அதில் ஒவ்வொருவருக்கும் தான் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் இருக்கும். ஆக்ஷன் இருக்கும்; ரொமான்ஸ் இருக்கும், காமெடி இருக்கும், சென்டிமென்ட் இருக்கும். இப்படி ஏதாவது ஒரு விஷயத்தால் ஈர்க்கப்பட்டு ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்றார்களோ அதுபோல் 'சூப்பர் டூப்பர்' படமும் அனைத்து அம்சங்களும் இருக்கும்படியான படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் சத்யா. ஆனால் நான் வாய் திறந்தால் பொய் தான் சொல்லுவேன். பொய் சொல்வேனே தவிர கெட்டவன் கிடையாது. இப்படிப் பொய் சொல்லிக் கதாநாயகியிடம் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வேன். நெருங்கிப் பார்த்தால் நாயகியும் ஒரு சிக்கலில் இருப்பார். தங்கள் சிக்கல்களிலிருந்து அவர்கள் 2 பேரும் எப்படி மீண்டு வெளியே வருகிறார்கள் என்பதுதான் கதை.

விறுவிறுப்பான, திரில்லிங்கான, கலகலப்பான, போரடிக்காத, கவனம் தளரவிடாத, இறுக்கமான திரைக்கதை அமைப்போடு படம் உருவாகியிருக்கிறது. இரண்டு மணிநேரம் ஓடும் இந்தப்படத்தில் இரண்டு வினாடிகள் கூட உங்கள் கவனம் சிதறாது. அப்படி விறுவிறுப்பான திரைக்கதையில் இப்படம் உருவாகிஇருக்கிறது. இது எனக்கு இரண்டாவது படம். ஒரு புதுமுக நாயகன் முழுநீள படத்தில் நடிப்பது பற்றிச் சிலர் விமர்சனம் செய்யலாம் . ஆனால் அதையும் நியாயப்படுத்துகிற மாதிரி காட்சிகளும் என் பாத்திர சித்தரிப்பும் இதில் இருக்கும். அதனால் படம் பார்த்தால் என் பாத்திரம் புரிய வைக்கும். என் உயரம் எனக்குத் தெரியும் நான் நீந்த வேண்டிய நீர் நிலையின் ஆழமும் எனக்குத் தெரியும் எனவே ஆழம் தெரியாமல் காலை விடவில்லை. எல்லாம் சரியாகப் பொருத்தமாக இருக்கிறது. இதைப் படம் பார்ப்பவர்கள் ஒப்புக்கொள்வார்கள். என்னுடன் நடித்திருக்கும் நாயகி இந்துஜா. இப்போதெல்லாம் கதாநாயகியாக நடித்து வருகிறவர்கள் சினிமாவை ஒரு முறையான தொழிலாக எண்ணித்தான் வருகிறார்கள். எனவே தொழில் ரீதியாக சரியாக இருக்கிறார்கள. அப்படித்தான் இந்துஜாவும். சினிமாவையும் தன் பாத்திரத்தையும் புரிந்து கொண்டு இதில் நடித்திருக்கிறார்.

ஒரு வளரும் நடிகையாக தன்னைப் புரிந்து கொண்டு சூப்பர் டூப்பர் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். படித்த தைரியமான நகர்ப்புறத்தில் இருக்கும் நவீன பெண்ணாக இந்துஜா வருகிறார். தன் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இப்படப்பிடிப்பின் 55 நாட்களும் நல்ல நட்பு சூழலில் கழிந்ததை எங்களால் மறக்கமுடியாது. நான் சினிமாவை நேசித்து நல்ல வாய்ப்புக்காகப் போராடிவரும் வளரும் நடிகர். எனக்கு இப்படம் நல்லதொரு வாய்ப்பாகும். அனைவரும் உழைக்கத் தயங்காத குழுவாக இப்படக் குழு உருவானது. நண்பர்கள் நட்புச் சூழல் நிலவ இப்படம் தொடங்கியது முதல் சாதகமான நல்லெண்ண அலைகளும் எங்களைச் சூழ்ந்து வருகின்றன. எனவே இப்படம் வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. வாய்ப்புக்காக ஆசைப்பட்டு சுமாரான கதைகளில் நடிக்க நான் தயார் இல்லை. என்னை ஆச்சரியமூட்டும் வகையில் கதை அமைந்தால் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன். வாய்ப்பு வந்தால் போதும் என்று அடுத்தவர் வலிகளில் கைத்தட்டல் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. சூப்பர் டூப்பர் படத்தில் என் நண்பனாக ஷாரா நடித்துள்ளார். நானும் அவரும் படம் முழுவதும் காமெடியில் கலக்கி இருக்கிறோம்.

மற்றும் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் ஆதித்யா நல்லதொரு வில்லனாக வருகிறார். மேலும் இன்னொரு முக்கிய வில்லன்னாக புதுமுக நடிகர் ஸ்ரீனி நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இப்படம் நல்ல பெயர் வாங்கித்தரும். இயக்குநர் ஏகே, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவாகரா தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துக் கொடுத்தனர். மொத்தத்தில் வெகுஜன ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்படியான சிறப்பான படமாக 'சூப்பர் டூப்பர்' இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. நான் சொல்வதில் உள்ள நியாயத்தைப் படம் பார்த்து அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT