Skip to main content

"சந்தோஷமா இருந்தாலும் கொஞ்சம் ஓவரா இருக்கோ என்றும் தோனுச்சு" - மகான் பட அனுபவம் பகிரும் துருவ் விக்ரம்

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

Dhruv Vikram

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மகான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ருவ் விக்ரம் மகான் பட அனுபவம் குறித்து நக்கீரனுடன் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"சிவாஜி சார், பிரபு சார் இணைந்து நடித்த சங்கிலி படம் பார்த்திருக்கிறேன். அதுபோக அப்பா, மகன் இணைந்து நடித்த சில தெலுங்கு படங்களும் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் அவை மாதிரி இருக்காது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் படத்தில் இணைந்து நடித்தால் என்னவெல்லாம் இருக்கும் என்று மக்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்குமோ அவை எதுவும் இந்தப் படத்தில் இருக்காது. 

 

படம் பற்றி என்னை டேக் செய்து நிறைய மீம்ஸ்கள் பாசிட்டிவாக வந்தன. அதை பார்க்கும்போது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. அப்பா மாதிரி என்னால் அவ்வளவு கெட்டப் மாற்றியெல்லாம் நடிக்க முடியாது என்பதால் சில மீம்ஸ்கள் கொஞ்சம் ஓவரா இருக்குற மாதிரியும் தோன்றியது. படத்தில் எனக்கும் சில சின்னச்சின்ன கெட்டப்கள் இருக்கும். அதை மக்கள் கவனிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது.   

 

இந்த மாதிரி படங்களில்தான் நடிக்க வேண்டாம், இந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டாம் என்றெல்லாம் எந்தத் திட்டமும் எனக்கு இல்லை. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறேன். அப்பாவும் நானும் இணைந்து நடித்தபோது அவர் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பார், என் கதாபாத்திரத்தில் நான் நடிப்பேன். அப்பா எப்படி நடிக்கிறார் என்பதை கூர்ந்து கவனித்ததில்லை. டப்பிங்கில் பார்க்கும்போது அப்பா இப்படியெல்லாம் நடித்திருக்கிறார், நாம் கவனிக்கவில்லையே என்று நினைத்தேன். ரஃப் ட்ராக்ல அப்பாவுக்கு நான்தான் டப்பிங் பண்ணேன். அப்பா நடித்த காட்சிகளை மறுஉருவாக்கம் செய்வது ரொம்பவும் கடினமாக இருந்தது. எவ்வளவோ முயற்சித்தும் சுமாராகத்தான் செய்ய முடிந்தது. அப்பாவுடைய நடிப்பை நான் எப்போதும் ரசிப்பேன். இந்தப் படத்தில் வித்தியாசமான நடிப்பை நீங்கள் பார்ப்பீர்கள். 

 

அப்பாவோடு வெளியே செல்லும்போது இரண்டு பேரும் அண்ணன், தம்பி மாதிரி இருக்குறீர்கள் என்று சிலர் சொல்லிருக்காங்க. சிலர் அப்பா என்னைவிட இளமையாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்".   

 

 

சார்ந்த செய்திகள்