Advertisment

தமிழர் குறித்த கருத்து - 12 வருடம் கழித்து மன்னிப்பு கேட்ட தன்யா!

dhanya balakrishnan apologise for his facebook post  issue

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், 7ஆம் அறிவு, நீ தானே என் பொன் வசந்தம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 26-ஆம் தேதி நடந்த லால் சலாம் பட இசை வெளியீட்டு விழாவில் தன்யாவும் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, 2012-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது தன்யா பதிவிட்டது போல் ஒரு ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்து பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

Advertisment

அவர் அப்போது போட்டிருந்த பதிவில், “அன்புள்ள சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்குறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்துக்காக பிச்சை எடுக்குறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம். உங்களுடைய மக்கள் எங்களுடைய அழகான நகரத்துக்கு வந்து அதனை ஆக்கிரமித்து கொச்சைப் படுத்துகிறார்கள். டேய் உங்களுக்கு வெட்கமே இல்லையாடா?” என குறிப்பிட்டிருந்தார். இதனால் தமிழர்களை இழிவு படுத்தி கருத்து தெரிவித்த தன்யாவுக்கு எப்படி இப்போது வாய்ப்பு கொடுக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக விமர்சித்து வந்தனர். மேலும் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் தன்யா, ரஜினி மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் லைக்கா மீதும் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது தன்யா பாலகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நான் செய்யும் தொழில் மேல் சத்தியம் .... கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்...அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிஷ்டவசமாக இதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை.

இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள் தான். அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல. நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன். அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே, அதனால் விளையாட்டுக்குக் கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன். என் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.

மனிதாபிமான அடிப்படையிலும், நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எந்த வித சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல. இந்த சம்பவம் நடந்ததற்குப் பின் நான் சில தமிழ் திரைப்படங்களும் (ராஜா ராணி, நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன். அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதுவும் நேரவில்லை. சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்பந்தப்படுத்தப்பட்டு விட்டது. அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சர்ச்சையினால் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மன உளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன். நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு” என்றார்.

dhanya balakrishna
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe