Skip to main content

இந்த ரம்ஜானுக்கு தனுஷின் பிளான்!

Published on 01/03/2018 | Edited on 02/03/2018

vada


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மூன்று பாகங்களாக உருவாகும் வட சென்னை படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் ரம்ஜான் பண்டிகை நாளில் படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

"விஜய் வந்தாரு.. அஜித் வருவாரு" நடிகர் டேனியல் பாலாஜி சிறப்பு பேட்டி (வீடியோ)

Next Story

2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்?

Published on 17/10/2018 | Edited on 18/10/2018

ஒரு தாதா... தான் பிறந்த ஊருக்கு நல்லது செய்யும் தாதா... அவருடன் இருப்பவர்களே செய்யும் துரோகம், கொலை, பழிவாங்கல், வன்மம், விசுவாசம், புதிய தலைவன் உருவாகுதல்.... - கதையாகக் கேட்க இது ரொம்பப் பழசுதான். அப்புறம் என்ன இருக்கு வெற்றிமாறனின் 'வடசென்னை'யில் புதுசா? கதையைத் தவிர மற்ற எல்லாமே புதுசுதான்.

 

dhanush vadachennai



கேரம்போர்ட் விளையாடினால் வாழ்க்கையில் முன்னேறலாம் என தன் ஊருக்கு எல்லாமுமாய் இருக்கும் ஒருவர் சொன்னதன்படி 'போர்டு' ஆடுபவராகிறான் அன்பு (தனுஷ்). தன் ஊரை சூழ்ந்திருக்கும் குற்றப்பின்னணியிலிருந்து விலகி நல்ல வாழ்க்கை வாழலாம் என்று காத்திருக்கும் நிலையில், குணா (சமுத்திரக்கனி), வேலு (பவன்), செந்தில் (கிஷோர்), பழனி (தீனா) இவர்களிடையேயான இன்னொரு ஆட்டத்தில் தானே கேரம்போர்டு காயினாகி பிறரால் சுண்டி ஆடப்படுகிறான். பத்மாவுடன் (ஐஸ்வர்யா) காதல், சந்திரா (ஆண்ட்ரியா) அன்பு, தம்பி (டேனியல் பாலாஜி) அக்கறை ஆகியவற்றுடன் அன்புவின் வாழ்க்கையில் குறுக்கே வரும் அந்த கேங்வாரின் பின்னணி என்ன, விளைவுகள் என்ன என்பதை இன்னும் இரண்டு பகுதிகளுக்கும் மீதி வைத்து பாதி சொல்லப்பட்டிருக்கும் பெரிய கதைதான் இந்த வடசென்னை.

 

ameer


'வடசென்னை' படம் உண்மையில், ஒரு பாத்திரத்தை மையமாக வைத்து சொல்லப்படும் ஒருவரின் கதையல்ல. பல வீரியமான கதாபாத்திரங்கள் சேர்ந்து நகர்த்திச்செல்லும் கதை. ரத்தத்துடன் சேர்த்து சதையும் தெறிக்கும் கொலை, ஆசன வாயில் திணித்து போதைப் பொருளை சிறைக்குள் கொண்டு செல்பவன், சிறைக்குள் நடக்கும் கேங்வார், மக்குக் ** என கெட்டவார்த்தை பேசிக்கொண்டே  அறிமுகமாகும் நாயகி, 'இன்னாமே, துன்னியா, கஸ்மாலம்' என்றில்லாமல் உண்மையான வடசென்னை மொழியைப் பேசும் பாத்திரங்கள், அறிவொளி இயக்கம், தலைவர்கள் மறைவு என அந்தந்த காலகட்டத்தின் அரசியல், சமூக நிகழ்வுகளையும் கதைக்குள் சேர்த்த சாமர்த்தியம், து.ஜ.த, பொ.ஜ.போ என்பது போல கற்பனை கட்சிகளை மட்டும் கதையில் வைக்காமல் அந்த காலகட்டத்தின் உண்மை அரசியல்வாதிகளையும் கட்சியையும் காட்டிய தைரியம், நாயகன் நாயகியல்லாமல் ஒரு டஜன் பாத்திரங்களின் பெயர்களை நம் மனதில் பதித்த ஆழமான கதாபாத்திர வடிவமைப்பு என  'வடசென்னை'யில் ஒரு நூறு அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் நமக்கு வைத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். பதினோரு வருடங்களில் இது நான்காம் படம். எந்த அவசரமும் இல்லாமல் ஒவ்வொரு திரைப்படத்தையும் தரமான ஒரு சினிமா அனுபவமாக ரசிகர்களுக்கு அளிக்கும் வெற்றிமாறனுக்கு நன்றி. உண்மையான வடசென்னை, அதன் மொழி, வாழ்க்கை, மக்கள் என இவைதான் இந்தத் திரைப்படத்தின் பெரும் பலம். உண்மைக்கு அருகே என்பதால் மிக மெதுவாக அலுப்பாக நகராமல் கேங்வாரும் விறுவிறுப்பாய் பரபரப்பாய் இருக்கிறது.

 

kishor daniel balaji



ஒரு ஊரை, நிலத்தைப் பற்றிய படமென்பதால் அந்த வாழ்க்கையை முழுமையாகத் தூக்கிவைத்து புனிதப்படுத்தாமல், அவர்களின் தொழில், வாழ்க்கை முறை, கெட்ட வார்த்தைகள் என இயல்பாகப் படமாக்கியிருப்பது நம்மையும் வடசென்னை வாழ்க்கையை வாழ வைத்திருக்கிறது. படத்தின் தொடக்கத்திலேயே 'இது வடசென்னை வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே' என்று அறிவித்துவிடுகிறார்கள். இருந்தாலும் வன்முறை, குற்றம், சட்ட விரோதம் போன்றவைதான் அந்த ஊரின் வாழ்க்கையோ என்ற அச்சத்தை உண்டாக்குகிறது படம். விறுவிறுவென சென்றாலும் ஒரு கொலை, பதில் கொலை, பதில் கொலை என்று செல்வது சற்றே அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் ஆழமாக பல பரிமாணங்கள் கொண்டதாக இருக்கிறது. படத்தைத் தாங்கி நிற்பதும் அத்தகைய பாத்திரப்படைப்பே. சமீபமாக தமிழ் படங்களில் நாம் அடிக்கடி பார்க்கும் நில அரசியல், இதிலும் உண்டு.
 

andrea aiswarya



தனுஷ், படத்தின் இடத்தை அடைக்காமல், ஆனால் கிடைத்த இடத்திலெல்லாம் பக்குவமாக நம்மைக் கவர்கிறார். அவருக்கு அமைந்த ஓரிரு சண்டைக்காட்சிகளில் 'மாஸ்' விரும்பிகளை திருப்திபடுத்தியுள்ளார். ஒரு நாயகனுக்கு மாஸ் என்பது கதைக்குள் இயல்பாக எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு இந்தப் படம் உதாரணம். அமீர், சமுத்திரக்கனி, 'டேனியல்' பாலாஜி, கிஷோர், பவன், தீனா, பாவல் நவகீதன், சுப்ரமணிய சிவா தொடங்கி படத்தின் சின்னச் சின்ன பாத்திரங்களில் நடித்தவர்களும் கூட மிக இயல்பாக, சிறப்பாக நடித்துள்ளனர். காட்சிகள் ஆங்காங்கே நீளமாக சென்றாலும், நடிகர்கள்தான் அதை அலுக்காமல் கடத்திச் செல்கிறார்கள்.

'ராஜன்' அமீர் வரும் பெரும்பாலான காட்சிகள் கூஸ்பம்ப் மொமெண்ட்தான். உண்மையில் இந்தப் பாத்திரத்தில் நடிக்கவிருந்த விஜய் சேதுபதி மிஸ் பண்ணிவிட்டார். அமீர், அழுத்தமாக நடித்துள்ளார். கண்களில் வன்மமும், பேச்சில் பொறுமையும் வெளிப்படுத்தி நடித்திருக்கும் ஆண்ட்ரியா அசர வைக்கிறார். தமிழ் சினிமாவில் எந்த நாயகிக்கும் கிடைக்காத ஒரு ஓப்பனிங் காட்சி ஐஸ்வர்யாவுக்கு. அதை அசால்டாகப் பேசி, நடித்து ஆச்சர்யத்தை  உண்டாக்குகிறார், வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார். ராதாரவி, 'ஆடுகளம்' படத்தில் தன் குரலில் காட்டிய வஞ்சகத்தை (பேட்டைக்காரன் பாத்திரத்துக்கு) 'வடசென்னை'யில் தோன்றிக் காட்டியிருக்கிறார்.

 

radharavi



வேல்ராஜின் ஒளிப்பதிவுக்கு உடைந்த சாமியானா பந்தலுக்கடியில் நடக்கும் சண்டைக்காட்சி ஒன்றே உதாரணம். பதற்றத்தையும் பயத்தையும் இசையுடன் இணைந்து பெருக்குகிறது ஒளிப்பதிவு. சந்தோஷ் நாராயணன், தன் 25ஆவது படத்தில் மிரட்டலான இசை ஆட்சி நடத்தியிருக்கிறார். பின்னணி இசை, காட்சிகளை ஒரு அடி தூக்கிப்பிடிக்கிறது. பாடல்கள் வணிகத்தைத் தேடாமல், படம் பேச விரும்பும் வாழ்க்கையைத் தேடிக்காட்டுகின்றன. வெங்கடேஷ்- ராமர் படத்தொகுப்பு பல்வேறு காலகட்டங்களை மாற்றி மாற்றிக் காட்டினாலும் குழப்பமில்லாமல் நல்ல திரைப்பட அனுபவத்தைத் தருகிறது. கலை இயக்கம் பீரியட்களை மிக எதார்த்தமாகக் கொண்டுவந்துள்ளது. '4 கெட்டவார்த்தை, 2 முத்தம், பல கொலைகள்... வேற எதுவுமில்லையா  வடசென்னையில்?' என்று கேட்டால் பதிலாக இத்தனை விஷயங்கள் வருகின்றன. கொஞ்சம் உற்று நோக்க வேண்டும், பக்குவமாகப் பார்க்கவேண்டும். 'A' சான்றிதழ் பெற்றிருப்பதால் குழந்தைகள் பார்க்க தடை செய்யப்பட்டிருக்கிறது. பெரியவர்களுக்குமே இந்தப் படத்தை ரசிக்க வேறொரு ரசனை வேண்டும்.

திரைமொழி என்பது பாலிஷ் செய்யப்பட்டு, வெள்ளையாக்கப்பட்ட அரிசியாக இருக்கவேண்டியதில்லை, ராவாக குருணையாகக் கூட இருக்கலாம், சுவையாக இருக்கும் என்று நிறுவியிருக்கிறது வடசென்னை. 'போதுமப்பா' என்று சொல்லவைக்காமல் இரண்டாம் பாகத்துக்காகக் காக்கவைத்து வெற்றி பெற்றிருக்கிறது 'வடசென்னை'.