dhanush wishes national award winners

Advertisment

திரைத்துறை கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையிலும் கெளரவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கி வருகிறது இந்திய அரசு. ஆனால், கரோனா காலத்தில் இவ்விருது வழங்கப்படாமல் இருந்தது. அதனால் இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய விருது பட்டியலில், 6 பிரிவுகளில் தமிழ் படங்கள் தேர்வாகியுள்ளது. அதில், பொன்னியின் செல்வன் 4 பிரிவுகளில் வென்றுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படத்திற்காக மணிரத்னமும் சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர் ரஹ்மானும், சிறந்த ஒளிப்பதிவாளராக ரவி வர்மனும் சிறந்த ஒலிப்பதிவாளராக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியும் விருது வாங்கவுள்ளனர். மேலும் திருச்சிற்றம்பலம் 2 விருதுகள் வென்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது நித்யா மேனனுக்கும், சிறந்த நடன இயக்குநருக்கான ‘மேகம் கருக்காதா...’ பாடலுக்காக ஜானி மற்றும் சதீஷ் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய விருதுக்கு தேர்வான பிரபலங்களுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா கதாபாத்திரத்திற்காக நித்யா மேனன் தேசிய விருதுக்கு தேர்வானது எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி. ஜானி மாஸ்டருக்கும், சதீஷ் மாஸ்டருக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் ஏ.ஆர். ராஹ்மானுக்கும் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.