நடிப்பு இயக்கம் என பிஸியாக பயணித்து வருகிறார் தனுஷ். கடைசியாக நடிகராக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் தமிழில் கலவையான விமர்சனத்தையும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றும் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.
குபேரா படத்தை தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ பிக், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் ஒரு படம் மாரி செல்வராஜுடன் ஒரு படம் மற்றும் அப்துல் கலாமின் பயோ பிக் ய்ள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இது போக அவரே இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தையும் கவனித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படங்களில் இளையராஜா பயோபிக் தயாரிப்பு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படங்கள் மட்டுமல்லாது போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமலே இருந்தது. பின்பு சமீபத்தில் ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவர்கள் தயாரிக்கும் படங்களின் பட்டியல் குறித்து வீடியோ வெளியாகியிருந்தது. அதில் விக்னேஷ் ராஜாவுடன் படம் பண்ணுவதை தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது. ஆனால் தனுஷ் குறித்து அதில் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தனுஷ் - விக்னேஷ் ராஜா படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் தனுஷின் 54வது படமாக உருவாகிறது. ஐசரி கணேஷ் தயாரிக்க எழுத்தாளராக விக்னேஷ் ராஜோவோடு ஆல்ஃப்ரெட் பிரகாஷ் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே விக்னேஷ் ராஜாவுடன் போர் தொழில் படத்துக்கு எழுதியவர். இதையடுத்து மீண்டும் இப்படத்தில் இணைகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். அறிவிப்பு போஸ்டரில் தீப்பற்றி எரியும் ஒரு இடத்திற்கு முன் தனுஷ் சோகத்துடன் நிற்கிறார். படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.