
தனுஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ராயன். இப்படம் தனுஷின் 50வது படமாகும். இதில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூலை 26, வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 7ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அதில் தனுஷ், ஏ.ஆர் ரஹ்மான், செல்வராகவன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
அவ்விழாவில் தனுஷ் பேசுகையில், “போயஸ் கார்டனில் வீடு வாங்கியது, பெரிய பேசுபொருளாக மாறியது. அப்படி மாறும் எனத் தெரிந்திருந்தால் சின்ன அப்பார்ட்மெண்ட்லயே இருந்திருப்பேன். ஏங்க நான் போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா? தெருவில் இருந்தால் அங்கயேதான் இருக்கனுமா? இந்தப் போயஸ் கார்டன் வீட்டிற்கு பின் சின்ன கதை இருக்கிறது. எனக்கு 16 வயது இருக்கும்போது என் நண்பனுடன் கதீட்ரல் சாலை செல்லும்போது ரஜினிகாந்த் வீட்டைப் பார்க்க வேண்டுமென ஆசை. அருகில் இருந்தவர்களிடம் இங்குத் தலைவர் வீடு எங்கு உள்ளது என்று கேட்டோம். அவர்கள் சொன்ன பிறகு நானும் என் நண்பனும் அவரின் வீட்டை பார்க்க செல்கிறோம். அங்கு சென்று ஒரு இடத்தில் நின்று தலைவர் வீட்டை பார்த்து சந்தோஷப்பட்டு, பைக்கை திருப்பிக் கொண்டு வரும்போது பயங்கரமான கூட்டம். அருகில் உள்ளவர்களிடம் அண்ணா அங்க தான் தலைவர் வீடு இருக்கிறது. இங்கு ஏன் இவ்வளவு கூட்டம் இருக்கிறது எனக் கேட்டேன். அப்பொழுது அவர்கள் இங்கதான் ஜெயலலிதா அம்மா வீடு இருக்கிறது எனச் சொன்னார்கள்.
நான் பைக்கை நிறுத்திவிட்டு ஒரு நிமிடம் நின்று, இந்தப் பக்கம் பார்த்தால் ரஜினி வீடு அந்தப் பக்கம் பார்த்தால் ஜெயலலிதா அம்மா வீடு, ஒரு நாள் எப்படியாவது இந்த மாதிரி போயஸ் கார்டன்ல சின்னதா ஒரு வீடு வாங்கி விடனும் என்ற விதை என் மனதில் விழுந்தது. அப்போது எனக்கு வீட்டில் நிறைய கஷ்டம், தொல்லைகள். அந்தச் சமயத்தில் 'துள்ளுவதோ இளமை' படம் மட்டும் ஓடவில்லை என்றால் நாங்க நடுத்தெருவுக்கு வந்திருப்போம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தோம். அந்த வயதில் நேற்றைய பற்றிய ஏக்கமும் இல்லை, நாளைய பற்றிய கவலையும் இல்லை. அப்படி இருந்த அந்த 16 வயது வெங்கடேஷ் பிரபுவுக்கு 20 வருடங்களுக்குப் பிறகு உழைத்து இன்றைக்கு தனுஷ் கொடுத்த பரிசுதான் அந்த போயஸ் கார்டன் வீடு” என்றார்.