தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். அந்த வகையில் பட அனுபவத்தை பகிர்ந்த தனுஷ் தனது ரசிகர்கள் பற்றியும் தன்னைப் பற்றி வரும் வதந்திகளை பற்றியும் பேசினார்.
தனுஷ் பேசியதாவது, “நீங்க என்ன பத்தி எவ்ளோ வேணா வதந்திகளையும் நெகட்டிவிட்டியையும் பரப்புங்க. ஒவ்வொரு தடவையும் என் படம் ரிலீஸுக்கு ஒன்றை மாசம் முன்னாடி அதை பன்னுங்க. ஆனால் என் ரசிகர்கள் ஒவ்வொருத்தரும் தீப்பந்தம் மாதிரி எரிஞ்சிட்டு இருக்குற வரைக்கும் நான் போய்டே இருப்பேன். என்னுடைய ரசிகர்கள் வெறும் ரசிகர்கள் மட்டும் கிடையாது. 23 வருஷமா என் கூட வந்த தோழர்கள். என்னுடைய வழித்துணையும் கூட. அவங்களை நாலு வதந்தியை பரப்பி காலி பண்ணிடலாம்னு நினைச்சா... அதைவிட முட்டாள்தனம் எதுவுமே கிடையாது. உங்களால ஒரு செங்கல கூட ஆட்ட முடியாது. எண்ணம் போல் வாழ்க்கை” எனப் பேசியுள்ளார்.