தனுஷ் இயக்கத்தில் அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இவருடன் நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் மற்றும் அர்ஜூன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தினை ரெட் ஜெயண்ட் பேனரில் இன்பன் உதயநிதி தமிழகத்தில் வெளியிடுகிறார்.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், தனது சிறுவயது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பகிர்ந்ததாவது, “நான் சிறுவயதாக இருக்கும் போது, எங்க ஊர்ல ஒரே ஒரு இட்லி கடைதான் இருக்கும். எனக்கு தினமும் அந்த இட்லி கடையில எப்படியாவது இட்லி சாப்பிடனும்னு ஆசை. என்னுடைய சிறுவயதில் அந்த இட்லி கடை ரொம்ப முக்கியமான கேரக்டர். ஆனா கையில காசு இருக்காது. அப்போ, அங்க காலையில போனா, வயல்ல இறங்கி பூ பறிக்க சொல்வாங்க, அப்படி பூ பரிச்சா, அதுக்கு ஏத்தது போல கூலி கொடுப்பாங்க. அதனால நான், என் அக்கா, கசின்ஸ்... எல்லாரும் காலங்காத்தால ஒரு நாலு மணிக்கு எழுந்திருச்சு, அந்த வயல்ல இறங்கி பூ பறிப்போம். எவ்ளோ முடியுமோ அவ்ளோ பறிப்போம். அதாவது நான்ஸ்டாப்பா இரண்டு - இரண்டரை மணி நேரம் பறிப்போம். அதுக்கு ஆளுக்கு இரண்டாருபா கொடுப்பாங்க.
அந்த காச எடுத்துகிட்டு நேரா ஒரு தோட்டத்துக்கு போவோம். அங்க ஒரு குட்டையில ஆசை தீர ஆட்டத்தை போட்டுட்டு, குளிச்ச துண்டோட அந்த இட்லி கடைக்கு போயி அந்த மர பெஞ்சுல உட்காந்து அந்த இரண்டாருபாய்க்கு அஞ்சு இட்லி சாப்டும் போது, அந்த டேஸ்டும், நிம்மதியும், சந்தோஷமும் இப்ப பெரிய பெரிய ரெஸ்டாரண்ட்ல சாப்டாலும் கிடைக்காது. இப்ப அந்த இட்லி கடைக்கு போனா எப்டி இருக்கும்... அந்த இட்லி கடைய வச்சி நாம ஏன் ஒரு படம் எடுக்கக்கூடாது... இந்த கதை மட்டும் கிடையாது. கிராமத்துல என் மனச கவர்ந்த, என்னை பாதிச்ச, ஒரு சில உண்மை கதாபாத்திரத்தையும் கலந்து ஒரு கற்பனையா எழுதுனது தான் இந்த இட்லி கடை” என்றார்.