தனுஷ் இயக்கி அவரே நடித்துள்ள புதுப் படம் ‘இட்லி கடை’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் மற்றும் அர்ஜூன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அக்டோபர் 1ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிடுகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோவையில் நடந்தது. தொடர்ந்து ப்ரீ நிகழ்ச்சில் மதுரையில் நடந்தது. இதைத் தொடர்ந்து திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தனுஷிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்விகளை பரிதாபங்கள் யூட்யூப் புகழ் கோபி, சுதாகர் மற்றும் டிராவிட் ஆகியோர் அவரிடம் இப்படம் கோவையில் இருக்கும் செஃப்பின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுப்பதாக ஒரு தகவல் வருவதாக கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “அந்த மாதிரிலாம் எதுவும் இல்லை. இது என் சொந்த கற்பனையில் உருவாக்கின கதை. என் கிராமத்தில் என்னை பாதித்த சில முக்கியமான கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கியது” என்றார். பின்பு ஒல்லியாக இருப்பதால் எழுந்த விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, “சின்ன வயதில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் வளர வளர பக்குவம் வந்துவிட்டது. புருஸ்லீ கூட ஒல்லியாகத்தான் இருப்பார்” என கலகலப்பாகப் பதிலளித்தார்.
இதையடுத்து ஆடியோ லான்ச்சில் இட்லி வாங்க கூட காசு இல்லை என்று பேசியது தொடர்பாக எழுந்த விமர்சனம் குறித்து கேள்விக்கு “நான் பிறந்தது 1983. எங்க அப்பா டைரக்டர் ஆனது 1991ல் தான். அந்த 8 வருஷம் கொஞ்சம் வறுமை தான். 1994வரையும் நான்கு பிள்ளைகள். எங்களை வளர்க்க அப்பா சிரமப்பட்டார். அதற்கு பிறகு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தது. இருந்தாலும் சின்ன வயதில் நாம் ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிட காசு கேட்டால் கொடுத்துவிட மாட்டார்கள். குறிப்பாக பட்ஜெட் குடும்பத்தில் கொடுக்க மாட்டார்கள். நாங்க நாலு பேருமே வீட்டினுடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு குழந்தைகள். அதனால் அவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது என யோசிப்போம். அதனால் வயலில் வேலை செய்து இட்லி வாங்கி சாப்பிடுவோம்” என்றார்.