தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.
இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் ஜூன் 20ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. மொத்தம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் படத்தின் அளவு இருக்கிறது. இந்த நிலையில் ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பட புரொமோஷனில் படக்குழுவினர் பிஸியாக இருக்கின்றனர். அந்த வகையில் படத்தின் மூன்றாவது பாடலான ‘பிப்பி பிப்பி டம் டம் டம்’ பாடல் மும்பையில் இன்று வெளியிடப்பட்டது. இதில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தனுஷ் பேசுகையில், “ஓம் நம சிவாய. எல்லோருக்கும் வணக்கம்” எனத் தமிழில் பேச தொடங்கினார். உடனே அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ரசிகர்களை பார்த்து பேசிய அவர், “உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். எனக்காக இங்க வந்திருக்கீங்க. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. ரொம்ப நன்றி” என்றார். பின்பு ஆங்கிலத்தில், “எனக்கு இந்தி தெரியாது. அதனால் இங்கிலீஷில் பேசுகிறேன். அதுவும் கொஞ்சம் தான் தெரியும். அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க” என்றார். தொடர்ந்து ஆங்கிலத்தில் தனது கதாபாத்திரம் குறித்தும் பட அனுபவம் குறித்து பேசி தனது உரையை முடித்தார்.