
தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார்.
இதில் ராயன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அடங்காத அசுரன்’ கடந்த 9ஆம் தேதி வெளியானது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர். பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். ஒரு திருவிழா பின்னணியில்,அமைந்திருந்த இப்பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. மே 24ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்து ஒரு போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. அதில் சந்தீப் கிஷனும் அபர்ணா பாலமுரளியும் இடம்பெற்றுள்ளனர். இருவருக்குமான காதல் பாடலாக இருக்கும் என தெரிகிறது. இந்த பாடல் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தனுஷ், “ஏ.ஆர் ரஹ்மானிடமிருந்து ஒரு கானா பாடல்” என குறிப்பிட்டுள்ளார்.
#Raayan 2nd single .. A GAANAA FROM @arrahman sir @sunpictures pic.twitter.com/ZyGRtvzGCV— Dhanush (@dhanushkraja) May 22, 2024