இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பார்க்கிங் படத்திற்கு 3 விருது கிடைத்துள்ளது. மேலும் ஆவணப்பட பிரிவில் லிட்​டில் விங்ஸ் படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைத்துள்ளது. இதை தவிர்த்து சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான் தேசிய விருதை வென்றிருந்தார். 

தேசிய விருது வென்றது குறித்து வீடியோ வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ், வாத்தி படக்குழுவுக்கும் தனுஷுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். மேலும் தனுஷ் தான் வாத்தி படத்திற்காக படக்குழுவிடம் என்னை பரிந்துறைத்ததாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது தேசிய விருது வென்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “71வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வாத்தி படத்திற்காக இரண்டாவது தேசிய விருதை வென்ற எனது சகோதரர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஒரு சிறப்புப் பாராட்டு. இது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அவருடைய சிறந்த இசை இனிமேல் தான் வரப்போகிறது என்பது எனக்கு தெரியும். அவருடன் அடுத்தடுத்து பணியாற்றுவதற்கு ஆர்வமாக இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பார்க்கிங் படக்குழுவிற்கு வாழ்த்து கூறிய அவர், எம்.எஸ்.பாஸ்கர் குறித்து, “இறுதியாக மிகவும் தகுதியான அங்கீகாரம். ஒரு அசாத்தியமான திறமைசாலி இறுதியாக தகுதியான பாராட்டை பெறுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.